வெந்து தணிந்தது காடு விமர்சனம்: வாய்ஸ் ஓவர் இல்லை, ஆங்கிலம் இல்லை… அட, கௌதம் மேனன் படமா இது?!

கிராமத்தில் இருந்து கதியற்று கிளம்பும் முத்து வீரன் எப்படி மும்பையின் முத்து பாய் ஆகிறார் என்பதுதான் `வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன்.

முள்ளுக்காட்டினைப் பிழைப்பாகக் கொண்டு வாழும் அளவுக்கு வறுமையும், பஞ்சமும் முத்துவின் குடும்பத்தைப் போட்டு வதைக்கிறது. அதையும் தீ விழுங்கிவிட, உதவி தேடி உறவினர் வீடு நோக்கி நகர்கிறார்கள். அவர் காட்டிய வழியில் மும்பைக்கு விரைகிறார் முத்து. காலையில் பரோட்டா கடையில் வேலை, அந்தி சாய்ந்ததும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடியிசம் என இரு வேறு புதிய உலகங்களுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதற்கிடையே பாவையைக் கண்டதும் காதல். ஓர் இரவில் முத்து அடியாள் கூட்டத்தில் எதிர்பார்த்ததைப் போலவே ஹீரோவாக, பெரிய தலைக்கட்டுகள் இருக்கும் வளையத்துக்குள் முன்னேறுகிறார். கர்ஜி கேங், குட்டி பாய் கேங் எனப் பிரிந்து கிடக்கும் ரவுடி மாஃபியாவுக்குள் முத்துவின் படிநிலை என்ன, அவர் கதியும், அவர் சார்ந்த நபர்களின் கதியும் என்னவானது என்பதாக விரிகிறது இந்த ‘வெந்து தணிந்தது காடு’ – பாகம் 1 KINDLING.

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

முத்து வீரனாகச் சிம்பு. சிம்புவா இது என வியந்து போகும் அளவுக்கு உருமாறியிருக்கிறார். ‘மாநாடு’ படத்தில் பார்த்ததைவிடவும் இதன் தொடக்கத்தில் மெலிந்து போய் வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாகக் கதை சகஜ நிலைக்குவர, அவரின் உடல்வாகும் அதற்கேற்ப மாறுகிறது. பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இடைவேளை சண்டைக் காட்சியாகட்டும், என்ன நடந்ததோ என்கிற பதைபதைப்புடன் இறுதி நிமிடங்களைக் கிரகிக்கத் திணறுவதாகட்டும், சிம்புவுக்கு இதுவொரு சிறப்பான செகண்டு இன்னிங்ஸ். ஹீரோயின் சித்தி இட்னானிக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும் நன்றாகவே நடித்திருந்தார்.

முத்துவின் தாயாராக ராதிகா. எதிர் கோஷ்டியில் இருக்கும் முத்துவின் நண்பராக மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீரஜ் மாதவ். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், முழுமையாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களுள் அவருடையதும் ஒன்று என்பதாலேயே அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஒரு கனெக்ட் உருவாகிறது. சிம்புவின் பாத்திரத்துக்கு இணையான கிராஃப் அங்கேயும் இருப்பது கூடுதல் சிறப்பு. அப்புக்குட்டியின் பாத்திரமும் அவரின் நடிப்பும் கதையை நகர்த்த உதவியிருக்கிறது. ஆனால், அவர் உட்படப் பல கதாபாத்திரங்களின் வசனங்கள் பல இடங்களில் பாத்திரத்தின் தன்மையை மீறி இலக்கிய நயத்துடன் இருப்பது இடறல்.

பாடல்களைக் கடந்து, இப்போதெல்லாம் பின்னணி இசையிலும் அதிகக் கவனம் செலுத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு ‘வெந்து தணிந்தது காடு’. குறிப்பாக இடைவேளை காட்சியின் போது வரும் பின்னணி இசை பக்கா மாஸ்! சண்டையில் சிம்பு துப்பாக்கியைக் கையில் எடுக்கும்போது ஒலிக்கும் ரஹ்மானின் குரல் கிளாஸான மேஜிக். கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் விட்டுவிட்டு ஜெயமோகனின் கதையுடன் புதிய களம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

சண்டைக் காட்சிகளிலும், ஹோட்டலுக்குள் நடக்கும் காட்சியிலும் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு அருமை. `நான் உனக்கு இதெல்லாம் பண்ணியிருக்கேன். அதனால நீ என்னைய கொல்ல மாட்டேன்னு நானே மனசைத் தேத்திக்கறேன்’; `உன் மன்னிப்பு எல்லாம் வேணாம், செத்துடு போதும்’ போன்ற சில வசனங்களில் ஜெயமோகன் – கௌதம் கூட்டணியின் உழைப்பு தெரிகிறது. அதே சமயம், நேட்டிவிட்டிக்காகச் சேர்த்திருக்கும் வசனங்களிலும், பொட்டல் காடுகளிலும் இன்னமும் ஏனோவொரு மேட்டிமைத்தனமே மேலோங்குகிறது.

ஆரம்பக்கட்ட காட்சிகள் கொஞ்சம் மெதுவாய் நகர்ந்தாலும், ‘Rise of Muthu’ என்பதாக இருக்கும் முதல் பாதி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதே சமயம், இரண்டாம் பாதி நகர நகர, ஆங்காங்கே மட்டும் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கிறார்களோ என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. ‘எங்குத் தொடங்கும் எங்கு முடியும்’ என்கிற பாடல் வரிகள் பின்னணியில் கேட்டாலும், நமக்கே ஒரு கட்டத்தில் ‘எப்போ முடியும்’ எனத் தோன்றிவிடுகிறது. ரொமான்ஸ் கௌதமின் பலம் என்றால், இரண்டாம் பாதியில் ரொமான்ஸ் காட்சிகள்தான் ஆகப்பெரும் சறுக்கல். கொஞ்சம் கூட யதார்த்தமும் இல்லை, படத்தில் அவை ஒட்டவும் இல்லை. என்னாச்சு கௌதம்?

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

திடீரென ஐந்து வருடங்களுக்குப் பிறகு என இரண்டாம் பாதிக்கான முன்னறிவிப்புடன் வரும் ‘Mid Credit’ காட்சிகளில் சிம்புவும் வேறு கெட்டப்பில் இருக்கிறார். நமக்கும் ‘யாரு இவங்க எல்லாம், வேற படம் ஏதாவது ஓடுகிறதா’ என்று தோன்றுகிற அளவுக்குச் சம்பந்தமே இல்லாமல் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. க்ளைமாக்ஸ் என்ற ஒன்றே இல்லாமல், இருப்பதை வைத்து எடிட்டிங்கில் ஒப்பேற்றிய எண்ணமே மேலோங்குகிறது. இரண்டாம் பாகத்துக்கான லீட் என்பதில் கவனம் செலுத்திவிட்டு, முதல் பாகத்தைத் தட்டுத் தடுமாறி முடித்திருக்கிறார்கள். படம் நடக்கும் காலகட்டம் என்ன என்பதிலும் போதிய தெளிவில்லை. வாய்ஸ் ஓவரை முற்றிலுமாக ஒதுக்கிவிட்ட கௌதம், இந்தப் படத்தில் பழங்காலம் போல கேசுவலாக நடிகர்களையே முழுப்பாடலுக்கும் வாயசைக்க வைத்து படமாக்கியிருக்கிறார். அது பெரிதாக செட் ஆகவில்லை.

சிம்புவின் நடிப்புக்காகவும், ரஹ்மானின் இசைக்காகவும், முதல் பாதி உட்பட ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்காகவும் இந்த வெந்து தணிந்த காட்டில் பயணம் செய்யலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.