வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் ராணியின் உடல்பல கி.மீ., துாரம் நின்று பொதுமக்கள் அஞ்சலி| Dinamalar

லண்டன்-மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனில் உள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பல கி.மீ., துாரம் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில், அவரது உயிர் பிரிந்தது. ஸ்காட்லாந்தில் இருந்து, விமானம் வாயிலாக ராணியின் உடல், 13ல் லண்டன் கொண்டு வரப்பட்டது.

விமான நிறுத்தம்

ராணி வசித்த பக்கிங்ஹாம் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டது. அப்போது, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம், இரவு முழுதும் ராணியின் உடல் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதன்பின், நேற்று முன்தினம் பக்கிங்ஹாம் அரண்மணையில் இருந்து, குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில், ராணியின் உடல் ஊர்வலமாக புறப்பட்டது. மத்திய லண்டன் சாலை வழியாக சென்ற ஊர்வலத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம், 40 நிமிடங்கள் நடந்தது. அந்த நேரத்தில், துப்பாக்கி குண்டுகள் மற்றும் மணியோசை தவிர, வேறு சத்தங்கள் கேட்க கூடாது என்பதற்காக, லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில், 40 நிமிடங்களுக்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

அனுமதி

ராணியின் உடல், பிரிட்டன் பார்லி., வளாகத்தில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ராணியின் உடலை பார்க்க, திரளான மக்கள் கூடினர். முதல் நாளே, 4 கி.மீ., துாரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர். ‘மக்கள் வரிசை, 16 கி.மீ., துாரத்தை தாண்டி அனுமதிக்கப்படாது’ என, ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர். ராணிக்கு அஞ்சலி செலுத்த, 24 மணி நேரமும் பொதுமக்கள்அனுமதிக்கப்படுகின்றனர். இறுதி சடங்கு நடக்கவுள்ள 19ம் தேதி காலை 6:30 மணி வரை, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் நடக்கும் இறுதி சடங்கில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

மயங்கி விழுந்த பாதுகாவலர்!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில், அவரது உடலை சுற்றி, அரண்மனை பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணி உடல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நபர், திடீரென மயங்கி விழுந்தார். அவரது முகம் தரையில் மோதி விழும் காட்சி, நேரலையில் ஒளிபரப்பானது. இரண்டு பாதுகாவலர்கள் உடனடியாக அவரை அங்கிருந்து துாக்கி சென்றனர். சில நிமிடங்களுக்கு நேரலை நிறுத்தப்பட்டது. அந்த பாதுகாவலர் நிலை குறித்து, தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.