நியூசிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஏலத்தில் ஒரு குடும்பம் கலந்துகொண்டது. அந்த ஏலம் `ஸ்டோரேஜ் யூனிட்’ என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்ட குடும்பம் பழைய சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் சொந்தமாக்கியிருக்கிறது. மேலும், பழைய சூட்கேஸ் என்பதால் வித்தியாசமான பொருள்கள் இருக்கும் என எதிர்பார்த்தபடி அந்த சூட்கேஸை திறந்ததும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அந்த பழைய சூட்கேஸ் முழுவதும் மனித உடல்களின் பாகங்கள் இருந்திருக்கின்றன. அதைக் கண்டு அதிர்ந்துபோன அந்தக் குடும்பம், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சூட்கேஸில் இருந்த மனித உடல் பாகங்கள் 2 குழந்தைகளுடையது எனத் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையில் அந்தக் குழந்தைகளின் தாயார் கொரியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக கொரிய காவல்துறை, “2018-ம் ஆண்டு நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் தன்னுடைய 7 வயது மற்றும் 10 வயது குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அதை சூட்கேஸில் அடைத்துவிட்டு 40 வயது பெண் தென் கொரியாவுக்குத் தப்பியிருக்கிறார். அவர் கொரியாவில் பிறந்து, நியூஸிலாந்தில் குடியுரிமை பெற்றவர் என்பதால், குற்றம்சாட்டப்பட்ட நபரை நியூசிலாந்துக்கு நாடு கடத்த வேண்டுமா என்பதை தென் கொரிய நீதிமன்றம் பரிசீலிக்கும்” என விளக்கமளித்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் குற்றவாளியைப் பிடிக்க நியூஸிலாந்தில் தொடங்கி தென் கொரியாவரை சென்ற காவல்துறையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.