2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் களமிறங்கி உள்ளார் பிகார் முதல்வுரும், பாஜக கூட்டணியில இருந்து அண்மையில் வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கடசித் தலைவருமான நிதிஷ் குமார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் என்றும், எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பிறகு பார்த்து கொ்ள்ளலாம் எனவும் கூறி வருகிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முதல் முயற்சியாக அண்மையில் டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சநதித்து தமது மாஸ்டர் பிளான் குறித்து பேசியுள்ளார். இதேபோன்று தேவகவுடா உள்ளிட்ட ஜனதா கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு மிகப்பெரிய பலன் காத்திருப்பதாக அவர் சஸ்பென்ஸ் வைத்து பேசியுள்ளார்.
“2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். பிகார் மாநிலத்தை மட்டும் மனதில் வைத்து நான் இதனை கூறவில்லை. பின்தங்கிய பிற மாநிலங்களையும் கருத்தில் கொண்டுதான் இதனை கூறுகிறேன்.
பிகாரில் சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. பெகுசாரியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தையும் வைத்தும், அதன் எதிரொலியாக அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை வைத்தும் பாஜக அரசியல் செய்ய பார்க்கிறது. ஆனால், எனது தலைமையிலான அரசில் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நிதிஷ் குமார் கூறினார்.