எல்லா பள்ளிகளிலும் டிசைன் கல்வி பாடத்திட்டமாக இருக்க வேண்டும். எல்லா மக்களிடமும் டிசைன் அறிவு சென்று சேர வேண்டும் என்று சாக்பீஸ் என்ற அமைப்பு மூலம் ரம்யா மற்றும் அவரது குழுவினர் தங்களது சொந்த பணத்தை போட்டும் , நண்பர்களின் உதவி மூலமும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் தினமம் நாம் கடந்து செல்லும் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தில் UX டிசைனர்களாக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள்தான். அப்படி என்ன செய்கிறார்கள் இந்த இளைஞர்கள் என்று கேசுவலாக இதன் நிறுவனர் ரம்யாவிடம் பேசினோம்.
ஐயையோ நிறுவனரென்று சொல்லாதீர்கள். எங்கள் அமைப்பில் நாங்கள் எல்லோரும் சமம் என்ற காரணத்தினால் எங்களை நாங்களே துணை-க்ரியேட்டர்கள் என்றுதான் அழைத்து கொள்வோம் என்று ஜாலியாக பேசினார். சமத்துவ இளைஞர்களா என்று யோசித்து கொண்டே டிசைன் பற்றி சொல்ல சொல்லி கேட்டோம்.
பொதுவாக எந்த ஒரு டெக்னாலஜியை உருவாக்குவதற்கு முன்பும் அதற்கு என்ன தேவை என்பதுதான் அதன் தொடக்கமாக இருக்கும். அதற்கென்று டெக் துறையில் research and design என்று ஒரு குழு இருக்கும். உதாரணத்திற்கு அதன் வேலை என்பது,
ஒரு வட்டாரத்தில் நாம் ஒரு உணவு டெலிவரி செய்யும் சாஃப்ட்வேரை உருவாக்க முடிவு செய்கிறோம் என்றால், அதற்கு முன் அந்த பகுதியில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்,
எத்தனை பேருக்கு இது போன்ற ஒரு உணவு டெலிவரி செயலி தேவை படுகிறது என்பது போன்ற பல்வேறு கேள்விகள் சார்ந்து ஆராய்ந்து அதன் மூலமாக ஒரு நல்ல சாஃப்ட்வேரை உருவாக்குவதுதான் முழுமையான ப்ராசஸ். அதற்கு பெயர்தான் சாஃப்ட்வேர் டிசைன்.
இதன் பிரதான பணியே ஒரு இடத்தில இருக்கும் பிரச்சனைக்கு தீர்வாக தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முயல்வதுதான் என்று எளிமையான முறையில் சொல்லி முடித்தார்.
சரி இதை பள்ளிகளில் சொல்லி கொடுப்பதன் மூலம் என்ன பயன் என்று கேட்டதற்கு, இந்தியாவை பொறுத்தவரை டிசைன் பள்ளிகள் குறைவுதான். மேலும் பொதுவாக டிசைன் என்பது மேல்தட்டு வர்க்க மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சாப்ட்வேர்களை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்துகிறது.
ஆனால், நாங்கள் இதை வயது வித்தியாசமின்றி எளிய மக்கள் முதல் எல்லா தரப்பினருக்கும் கற்று தருகிறோம். எனவே, எதிர்காலத்தில் எளிய மக்களின் குறைகளை போக்குவதற்கான சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்ட்வேர்களை உருவாக்க முடியும் என்கிறார் ரம்யா.
என்ன வகைகளில் இதை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இதுவரை தமிழகத்தின் சென்னை, கோவை, தூத்துக்குடி உட்பட ஒரு சில மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட டிசைன் நூலகங்களை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு என டிசைனிங் கற்றுக் கொடுப்பதாகவும் கூலாக பதில் சொல்கிறார்.
மேலும் வாரம் ஒருமுறை பல அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிசைன் வகுப்புகளும் எடுக்க படுவதாக கூறுகிறார். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும், வாழ்வியல் பார்வையிலும் எந்த பிரச்சனையையும் சமாளிக்க , தீர்வு காண கற்றுக் கொள்வார்கள் என்று கூறுகிறார்.
இவ்வளவு நல்ல விஷயத்தை எப்படி யார் துவங்கினார்கள் என்று கேட்டதற்கு , முதன்முதலில் ரம்யாவும் அவரது 10 டிசைன் மாணவர்களும் இணைந்து உருவாக்கியதாகவும் , தற்போது ரம்யா மற்றும் அவரின் நண்பர்கள் கோமதி, காவியா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கணக்கான நபர்களின் உதவியோடு தமிழகம் முழுவதும் நடந்து வருவதாகவும் கூறினார்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் டிசைன் என்பது பெரிய வணிகமாக பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக சொல்லி தரப்படுவது ப்ரொடக்ட் டிசைனிங் தான். ஒரு செயலி அல்லது வெப்சைட் டிசைன் செய்வதுதான் அதிக வியபாரம் மற்றும் பணம். ஆனால், நாங்கள் மாணவர்களுக்கு சொல்லி தரும்போது வெறும் ப்ரொடக்ட் டிசைனிங் மற்றும் சொல்லித்தருவதில்லை.
மாறாக, சோசியல் டிசைனிங் என்று சொல்ல படுகிற பிரச்சனைகளை தீர்க்க முயல்கிற டிசைனிங், டிஜிட்டல் டிசைனிங் மற்றும் ப்ராடக்ட் டிசைனிங் என மூன்றையும் சேர்த்து கற்றுக் கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்கள் சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண்பார்கள், அதே சமயம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருக்கி கொள்வார்கள் என்கிறார் ரம்யா.
அதே போல் டிசைனிங் எத்திக்ஸை எங்கள் மாணவர்களுக்கு முக்கியமாக சொல்லி தருகிறோம். ஒரு டிசைன் செய்கிறோம் என்றால் அது மக்களுக்கு எதிரானதாகவோ அல்லது பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என உறுதியாக சொல்கிறார் ரம்யா.
உங்களுடைய இலக்குதான் என்ன என்பதை கேட்டதற்கு தற்காலிக இலக்காக எல்லா பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டிசைன் கல்வியை கொண்டு வருவதற்கான இலக்கை நோக்கி அதற்கான ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறோம். அதே போல், அல்டிமேட் இலக்காக டிசைன் மூலமாக மக்களே மக்களுக்கான பிரச்சனைகளுக்காக தீர்வு காண்பதற்கான சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு. கண்டிப்பாக அது நிறைவேறும் என்று தீர்க்கமான புன்னகையோடு நன்றி கூறி விடைப்பெற்றுக் கொண்டார் ரம்யா.