நடிகர்கள்: சிம்பு, சித்தி இத்னானிஇசை: ஏ.ஆர். ரஹ்மான்இயக்கம்: கெளதம் மேனன்
சென்னை: சிம்பு – ஏ.ஆர். ரஹ்மான் – கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் திரையில் செய்துள்ள மேஜிக் தான் வெந்து தணிந்தது காடு.
நாயகன், தளபதி, பாட்ஷா, புதுப்பேட்டை, ஜகமே தந்திரம் வரை ஏகப்பட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்துள்ள தமிழ் சினிமாவில் மேலும், ஒரு புதிய கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள படம் தான் இந்த வெந்து தணிந்தது காடு.
சில படங்களை பார்த்த உணர்வுகள் கதையில் வந்தாலும், சிம்புவின் யதார்த்தமான நடிப்பு மற்றும் இயக்குநர் கெளதம் மேனனின் வித்தியாசமான ஸ்டோரி டெல்லிங் மற்றும் ஸ்லோவாக நகரும் காட்சிகளையும் தனது பின்னணி இசையால் தாங்கிப் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான் எனும் மிகப்பெரிய தூண் இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு என விரிவாக இங்கே பார்ப்போம்..
என்ன கதை
திருநெல்வேலியில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் கருவக்குளம் எனும் ஊரில் நன்கு படித்து முடித்து விட்டு குடும்ப சூழல் காரணமாக முள் காட்டில் வேலை செய்யும் இளைஞனாக வரும் முத்துவை எப்படியாவது நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என அவரது அம்மா நினைத்து ஒரு அண்ணாச்சியிடம் உதவி கேட்க, அந்த அண்ணாச்சிக்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக மும்பை செல்லும் முத்து அங்கே பரோட்டா கடையில் வேலை பார்க்கிறார். தன்னுடன் தங்கி இருப்பவர்களை சிலர் கொல்வதை பார்த்து ஊரில் இருந்து தான் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து சுடும் நேரத்தில் கேங்ஸ்டராக மாறும் முத்து எப்படி முத்து பாய் ஆகி மும்பையையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல், யதார்த்த காட்சிகளுடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
மிரட்டும் சிம்பு
19 வயது பையனாக வர வேண்டும் என இயக்குநர் கேட்டதும், உடல் எடையை குறைத்துக் கொண்டு அதே போல வந்து நின்றதாகட்டும், கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் அவருக்கு வயசாகிறது என்பதை தோற்றத்தில் காட்சிகளாக காட்டியது மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த சாதாரண முத்துவாக பரோட்டா கடையில் இருக்கும் காட்சிகளில் புதுவிதமான சிம்புவை ரசிகர்களுக்கு கண் முன் காட்டி மிரட்டுகிறார்.
ஜட்டிக் கடையில் வேலை பார்க்கும் ஹீரோயின்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போலவே இங்கேயும் சிம்புவுக்கு 21 வயசு ஆகும் போது 25 வயசு சித்தி இத்னானியுடன் காதல் வயப்படுகிறார். ஊரில் இருந்து இரண்டே ஜட்டிகளுடன் வரும் சிம்பு, இன்னொரு ஜட்டி வாங்கலாம் என கடைக்கு செல்ல, ஜட்டிக் கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக ஹீரோயின் இன்ட்ரோ வேறலெவல், சிம்புவின் வயதை அறிந்ததும் போடா போயி வயசுக்கு வந்துட்டா வா பேசலாம் என அவர் சிம்புவை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கும் பின்னர் அவங்க வீட்டில் வந்து பணத்தை காட்டி பெண் கேட்கும் காட்சிகளும் அசத்தல்.
கெளதம் மேனன் கம்பேக்
மாநாடு படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கெளதம் மேனன் கம்பேக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட ஆபாச வசனங்களை சென்சார் போர்டு மியூட் செய்துள்ளது. மலையாளி கேங்ஸ்டர் கும்பலுக்கும் தமிழ் அண்ணாச்சி கும்பலுக்கும் இடையே மும்பையில் நடக்கும் கேங் வார் கதையை வார்த்தைகளால் சொல்லாமல் காட்சிகள் வழியாக கடத்தி இருப்பதில் ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர். அடியாளாக மாறும் சிம்பு எப்படி தலைவனாகிறான் என்கிற கதையை தான் முதல் பாகம் சொல்லி உள்ளது.
பிளஸ்
வெந்து தணிந்தது காடு படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை தான். ஸ்லோவாக நகரும் ஆரம்ப காட்சிகளையே ரசிக்கும் படியான காட்சிகளாக அவரது பின்னணி இசை மற்றும் மனதை வருடும் பாடல்கள் மாற்றி விடுகின்றன. சொதப்பலான திரைக்கதையை எழுதாத இடத்திலேயே கெளதம் மேனன் படத்தை காப்பாற்றி விடுகிறார். சிம்புவின் அபாரமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஹீரோயின் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
மைனஸ்
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படமாக வெந்து தணிந்தது காடு வெளியாகி உள்ளது. துப்பாக்கி சத்தம், இரு கோஷ்டிகளுக்கு இடையே சண்டை, பெரிய டான் பில்டப் என அடிக்கடி பார்த்துப் புளித்துப் போன கதையாக இருப்பதால், அனைத்து ரசிகர்களையும் மாநாடு படம் பார்க்க வைத்தது போல வெந்து தணிந்தது காடு பார்க்க வைக்குமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. படத்தை இரண்டாவது பாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கிளைமேக்ஸை சப்புன்னு முடிச்சிட்டாங்க.. ஆனால், சிம்புவின் வித்தியாசமான நடிப்புக்காக தாராளமாக இந்த படத்தை தியேட்டரில் ஒருமுறை பார்க்கலாம்.