சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். ‘அண்ணா’ எனும் தலைப்பில் ஐ.நா. சபையின் மூத்த அரசியல் அலுவலர் முனைவர் இரா. கண்ணன் உரையாற்றினார். தொடர்ந்து, விழாவின் நோக்கம் குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ந.அருள் உரையாற்றினார். பிறகு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் அண்ணா குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 (நேற்று) முதல் அக்.14-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில், நிறுவன வெளியீடுகள் 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.