அதிமுக ஆட்சியில் கண்மாயில் மைதானம் கட்டியதாக வழக்கு மக்கள் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்கமுடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இருஞ்சிறையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சுழி அருகேயுள்ள டி.வேலன்குடியில் ஆலங்குளம் கண்மாய் உள்ளது. கடந்த 2019 – 20ல் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கத்தை அகற்றஉத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், ‘‘நீர்நிலைப்பகுதியை ஆக்கிரமித்து எப்படி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதற்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டது’’ என்றனர். அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் கட்டியுள்ளனர். தற்போது நீர்நிலைப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘பொதுமக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்க முடியாது’’ என்றனர். பின்னர் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.