புதுடெல்லி: குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு ஊழியர்களை தனது கட்சிக்காக பிரசாரம் செய்யத் தூண்டியது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடகா முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.மதன் கோபால் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் சின்னம் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்குதல்) குறித்த தேர்தல் நடத்தை விதி 1ஏ- ஐ மீறியுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய விதம் மிகவும் தவறானது. சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள எங்களைப் போன்றவர்களை அது மிகவும் பாதித்துள்ளது. ஒரு முதல்வரிடமிருந்து அப்படி ஒரு முரணான, நிதானம் தவறிய பேச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது அவருக்கான உரிமை. ஆனால், பொதுப் போக்குவரத்து ஊழியர்களான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் காவல் துறையினரை தன்னுடைய கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தது மிகவும் தவறு. அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்காக பிரசாரத்தில் ஈடுபட முடியாது, ஈடுபடக் கூடாது. அரசு ஊழியர்களுக்கு என சில நடத்தை விதிகள் உள்ளன. மேலும், அவர்கள் இந்திய அரசியலைமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்த தவறான முன்னுதாரணம் ஜனநாயக நடைமுறைகளுக்கு நல்லதில்லை.
ஓர் அரசு அதிகாரியாக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது நன்றாக தெரியும். முன்னாள் அரசு ஊழியரான அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விதம் மிகவும் தவறானது. தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகளின் இந்தகைய பொறுப்பற்ற நடத்தை நல்லதில்லை. அது அரசு ஊழியர்களுக்கும் நல்லதில்லை.
அதனால், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான நாங்கள் ஒரு மாதிரி நடத்தை விதி வேண்டும் என்று கேட்டுள்ளோம். சட்ட விதிகள் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ள முன்னாள் அதிகாரிகளான நாங்கள், அரசியல் கட்சிகளின் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துளோம். இந்த விவகாரம் புதிய நடைமுறையாக மாறுவதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்தக் கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கடிதம் எழுதியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த செப்.3-ம் தேதி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில், அரசு ஊழியர்களை தனது கட்சிக்காக வேலை செய்ய தூண்டும் விதமாக பேசியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் பிற அரசு அதிகாரிகள் 56 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.