சென்னை: ஆவினில் 9 வகையான தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மூ.நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மூ.நாசர் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளிக்கு சிறப்பு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.85 கோடிக்கு சிறப்பாக விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கெனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன் 9 புதிய இனிப்பு வகைகள் புதிதாக தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு துறை சார்ந்தவர்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்க வேண்டும்.
கறந்த பால் கறந்த படியே சுத்தமான நெய் கொண்டும், எந்தவித கலப்பிடமும் இல்லாத சுத்தமானவை ஆவின் இனிப்புகள். பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். ஆவினில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். தீபாவளிக்கு இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக, பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பண்டிகை காலத்தையொட்டி குலாப்ஜாமூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளின் விலை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரம்:
- 125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்வு
- 250 கிராம் குலாப்ஜாமூன் ரூ.80 லிருந்து ரூ.100 ஆக உயர்வு
- 100 கிராம் ரசகுல்லா ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்வு
- 200 கிராம் ரசுகுல்லா ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்வு
- 500 கிராம் பால் கோவா ரூ.210 லிருந்து ரூ.250 ஆக உயர்வு
- 100 கிராம் பால் கோவா ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்வு
- 250 கிராம் பால் கோவா ரூ.110 லிருந்து ரூ.130 ஆக உயர்வு
- 1 கிலோ சர்க்கரை இல்லாத கோவா ரூ.520 லிருந்து ரூ.600 ஆக உயர்வு
- 500 கிராம் சர்க்கரை இல்லாத கோவா ரூ.260 லிருந்து ரூ.300 ஆக உயர்வு
- 100 கிராம் மில்க் பேடா ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்வு
- 250 கிராம் மில்க் பேடா ரூ.110 லிருந்து ரூ.130 ஆக உயர்வு
- 500 கிராம் மைசூர்பா ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்வு
- 250 கிராம் மைசூர்பா ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு