அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்கம் மட்டுமின்றி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்த நியூ படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கதாநாயகனாக நடித்த படங்கள் தோல்வியடைய சில காலம் இயக்கம், நடிப்பு உள்ளிட்டவைகள்லிருந்து விலகியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இசை என்ற படத்தை இயக்கி நடித்தார். மேலும் அப்படத்துக்கு இசையமைக்கவும் செய்தார். அந்தப் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் நடிகராக களமிறங்கினார் எஸ்.ஜே. சூர்யா. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி இனி கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக சூர்யா வலம் வருவார் என்று அன்றே கணிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் அவர் மாநாடு படத்தில் நடித்தார்.
மாநாடு படமும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் நடிப்பதற்காக ஏகப்பட்ட படங்கள் புக்காகிவருகின்றன. அவரும் பிஸியாக நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில்கூட அவர் நடிப்பதற்கு கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு 54 வயதாகிறது. ஆனாலும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் அவருக்கு பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை அவரும் மறுத்து வந்தார்.
இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி உள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது.
ஒருவேளை நியூ படம் தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாக மாறி இருக்கும். அந்த கஷ்டமும் என்னுடனேயே போய் இருக்கும். ஆனால் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருந்திருந்தால் அது அவர்களையும் பெரிய அளவில் பாதித்திருக்கும்” என்றார்.