இது இல்லாட்டி டைடல் பார்க் வந்தாலும் கஷ்டம் தான்… பெரிய சிக்கலில் மதுரை!

மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரப் போகிறது. இதுதான் சமூக வலைதளங்களில் இன்றைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. தெற்கு விஸ்வரூபம் எடுக்கும். வேலைவாய்ப்பு பெருகும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களை நோக்கி செல்ல வேண்டியதில்லை. தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழக அரசு அளித்துள்ள மகத்தான பரிசு என்றெல்லாம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி வருகின்றனர். இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

ஓரிடத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறக்கப்பட்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அப்படியே செயல்படத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஊழியர்கள் எங்கிருந்து வருவார்கள். அவர்கள் நிறுவனத்திற்கு வந்து சேர போதிய போக்குவரத்து வசதிகள் இருக்கிறதா? நல்ல சாலைகள் உள்ளதா? குடியிருப்புகள் இருக்கின்றனவா? என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மாநில அரசும், மதுரை மாநகராட்சியும் கவனிக்க வேண்டிய இடத்தில் உள்ளது.

மதுரையை பொறுத்தவரை ஒரு பாலம் கட்டவே பாடாய் பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நகருக்கு உள்ளேயே விரைவாக சென்றடையும் வகையில் வசதி வாய்ப்புகள் இல்லை. எங்கு பார்த்தாலும் கடும் வாகன நெரிசல் தான் தென்படுகிறது. இந்த சூழலில் புதிதாய் வரிசை கட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்தால் அதை எப்படி சமாளிக்கப் போகிறது மதுரை? என்ற கேள்வி தான் எழுகிறது.

வேகமாய் வளர்ந்து வரும் மதுரைக்கு தற்கால சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். விரைவான மற்றும் நவீன அம்சங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம். மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் போன்றவை வருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பேருந்து வசதிகளுக்காக முக்கிய சந்திப்புகளில் புதிய பாலங்கள் கட்டப்பட வேண்டும்.

தற்போதைய சாலைகள் அகலப்படுத்த வேண்டும். பைபாஸ் சாலைகள், சர்வீஸ் சாலைகள் என தேவைக்கேற்ப கொண்டு வர வேண்டியுள்ளது. இவற்றை செயல்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக செயல்படுத்தினாலே போதும் என்கின்றனர் ஒருசாரார். அதேசமயம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதமாகி வருவதாகவும், தோண்டப்படும் பள்ளங்களால் மழை காலங்களில் வாகன ஓட்டிகள் அவதி அடைவது தான் மிச்சம்.

ஸ்மார்ட் சிட்டிக்கு வந்த தொகையை பையில் போட்டு சில அரசியல் தலைவர்கள் ஊழல் செய்து விட்டு பொய் கணக்கு எழுதி விடுகின்றனர். இதனால் தரமற்ற கட்டுமானங்களும், போதிய வசதிகளும் கிடைக்காத நிலை தான் ஏற்படுவதாக மறுசாரார் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் முதலில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதில் போக்குவரத்து வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் செய்து தர வேண்டும். இல்லையெனில் டைடல் பார்க் வந்தாலும் வேறு மாதிரியாக நெருக்கடிகள் ஏற்பட்டு நிலைமை சிக்கலாக தான் மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.