`கர்நாடக இசைப்பேரரசி’ எனப் போற்றப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில்,தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே அவரது முழுப்பெயர். அவரது முதல் கச்சேரி 10 வயதில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஹிந்துஸ்தானி இசையில் `ஆனந்த ஜா’ எனும் ஒரு மராட்டியப் பஜனுடன் தொடங்கியது. அதிகாரபூர்வக் கச்சேரி 1935-ல் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் அரங்கேறியது.
’சேவாசதனம்’, ’சகுந்தலை’, ’சாவித்ரி’, ’மீரா’ போன்ற படங்களில் நடித்து நாடு முழுவதும் புகழ் பெற்றார். இவர் பாடிய திரையிசைப் பாடல்களான ‘காற்றினிலே வரும் கீதம்’,’மனமே கனமும்’, ‘பிருந்தா வனத்தில் கண்ணன் வளர்ந்த’, ‘பிரேமையில் யாவும் மறந்தேன்’ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
இவரது ‘மீரா பாய்’ இந்திப்படத்தைப் பார்த்த பிரதமர் நேரு, “இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர்தானே” எனப் பாராட்டினார். கர்நாடக இசையில் இவர் பாடிய ‘குறை ஒன்றும் இல்லை’, ‘பஜகோவிந்தம்’, ‘மைத்ரிம் பஜத’, ‘ரங்கபுர விஹாரா’, ‘ஜகதோதாரன’, ‘ஸ்ரீமந்நாராயண’, ‘பாவயாமி கோபால’ போன்ற கீர்த்தனைகள் மிகப் புகழ்பெற்றவை.
திருப்பதில் இன்றளவும் எம்.எஸ்-ன் சுப்ரபாதம் கேட்டுத்தான் திருப்பள்ளிஎழுச்சி நடைபெறுகிறது. மேலும் அவருக்கு திருப்பதியில் வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்.எஸ், திருப்பதியின் முதல் ஆஸ்தான தேவஸ்தான வித்துவான் எனும் பட்டத்தைப் பெற்றார்.
சரோஜினி நாயுடு, எம்.எஸ்-ன் இசையில் மயங்கி ‘இந்தியாவின் வானம்பாடி’ எனும் பட்டத்தை எம்.எஸ்-க்கு வழங்கினார்.
மகாத்மா காந்தி தன் 78-வது பிறந்தநாள் பரிசாக, `ஹரி தும் ஹரோ’ எனும் கீர்த்தனையை எம்.எஸ். பாடக் கேட்க ஆசைப்பட்டார். ஆனால், எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கோ அந்த கீர்த்தனை தெரியாததால் முதலில் மறுத்து, பின்னர் ஒர் இரவுக்குள் பயிற்சி செய்து அதனை மெட்ராஸ் ஆல் இந்தியா ரேடியோவில் ரெக்கார்டு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
எம்.எஸ்-ன் மகத்தான இசைப் பயணத்திற்கு ‘ரமோன் மகசேசே’, ’இந்திராகாந்தி விருது’, ’பத்ம பூஷன்’, ’பத்ம விபூஷன்’, ’பாரத ரத்னா’ போன்ற உயரிய விருதுகள் கிடைத்தன. நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் 1966-ம் ஆண்டு இசைக் கச்சேரி நடத்திய முதல் இந்திய இசைக் கலைஞர் எம்.எஸ். அங்கு இராஜாஜி எழுதிக் கொடுத்த ’May The Lord; Forgive Our Sins’ எனும் ஆங்கிலப் பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்நாளில் சந்தித்த அனைத்து விமர்சனங்களுக்கும் தனது அமைதி மற்றும் இசையின் மூலம் பதிலளித்தார். தனது கச்சேரி மூலம் வரும் நிதியை பல்வேறு நற்சேவைகளுக்கு நன்கொடையாகக் கொடுத்த `கானக்குயில்’, 2004-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் தனது 88 வயதில் காலமானார். அவர் பாடிய ஒவ்வொரு ஸ்வரங்களும் நம் மனதில் நீங்கா இடம் கொண்டிருக்கும்!