மதிய உணவுத் திட்டம்:
மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கும்போது, அறிவுப்பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர், தமது ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டமாக மெருகேற்றினார் எம்ஜிஆர்.
முட்டை, வாழைப்பழம்: ப
ள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜரும், எம்ஜிஆரும் செயல்படுத்திய சிறப்பான திட்டத்தில் தன் பங்குக்கு முட்டை/யையும், வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக் கொண்டார் கருணாநிதி. இப்படி தமிழகத்தை ஆண்ட ஆளுமைகள் ஆளுக்கொரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கும்போது கலைஞரின் ஆட்சியை நடத்துவதாக கூறும் ஸ்டாலின் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?
சிற்றுண்டி திட்டம்:
ஆரம்பப் பள்ளி மாணவர்களு்க்கு காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து அசத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதுவும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக அரசின் சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
எம்ஜிஆர் ஸ்டைல்:
மதுரை, கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின், அத்துடன் நில்லாமல் மாணவர்களுக்கு தனது கையாலேயே உணவு பரிமாறியதுடன் அவருடன் சரிசமமாக தரையில் அமர்ந்து உணவை ருசித்து அவர்களை மகிழ்வித்தார். ஸ்டாலினின் இந்த செயல், சத்துணவு திட்டத்தை தொடங்கியபோத எம்ஜிஆர் பின்பற்றிய ஸ்டைலை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
1982 ஜூலை 1 ஆம் தேதி திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ள பிலோமினாள் நடுநிலைப் பள்ளியில் தான் சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடக்கி வைத்தார். அன்றைய தினம் அவரே பள்ளி மாணவர்களுக்கு தன் கையால் உணவுப் பரிமாறியதுடன், அவர்களுடன் சரிசமமாத அமர்ந்து உணவு அருந்தியும் மகிழ்ந்தார். தற்போது ஸ்டாலின் இந்த விஷயத்தில் எம்ஜிஆர் ஸ்டைலை ஃபோலா செய்துள்ளதாக பெருமை பொங்க கூறுகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
அந்த சிறுவன் யார்?:
இந்த பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் இருக்க, 40 ஆண்டுகளுக்கு முன் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டபோது அவரது பக்கத்தில் அமர்ந்து உணவருந்திய சிறுவன் குறித்த சுவாரஸ்ய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. கே.புஷ்பராஜ் என்ற சிறுவன் தான் அன்று எம்ஜிஆருக்கு இடதுபக்கம் அமர்ந்து உணவு உண்டவர் என்றும், பி.எட்., பட்டதாரியான அவருககு தற்போது 40 வயதாகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
நெகிழ்ச்சி:
திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, காட்டூர் பாத்திமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்பராஜ், எம்ஜிஆர் உடன் உணவருத்திய அந்த பொன்னான தருணத்தை இவ்வாறு நினைவுகூருகிறார். ‘அப்போது எனக்கு ஐந்து வயது. 1 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த நான் ஜூலை 1ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றேன். வகுப்புக்கு சென்றதும், ‘இன்று நீ நமது சி.எம். உடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட போகிறாய்’ என்று ஆசிரியர் கூறினார்.
சி.எம். என்பதற்கு அர்த்தம் தெரியாத வயது. எம்ஜிஆருடன் அசால்ட்டாக அமர்ந்து உணவு அருந்தினேன். பின்னாளில் அந்த நிகழ்வை என் தந்தை சொல்ல கேட்டபோது, எவ்வளவு பெரிய மனிதரின் அருகில் அமரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்பதை எண்ணி பலமுறை நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றேன்” என்று மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார் புஷ்பராஜ்.