ரஷ்யாவுடனான போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்திய மாணவர்கள் அதிகளவில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தனர். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். தொடர்ந்து இங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. `தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சட்டம், 2019ன் படி அத்தகைய இடமாற்றத்தை அனுமதிக்க எந்த விதியும் இல்லை. அத்தகைய தளர்வு வழங்கப்பட்டால், அது நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை கடுமையாக பாதிக்கும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்ற இடமாற்றம் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ன் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் அது கூறியுள்ளது.
மேலும், வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள், கல்லூரிகள் முதல், இந்திய மருத்துவக்கல்லூரிகள் வரை, இதுவரை, எந்தவொரு இந்திய மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திலும், எந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்களையும் சேர்க்கவோ, படிப்பினை தொடரவோ இந்திய மருத்துவ கவுன்சில் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டிற்கு மருத்துவம் படிக்க செல்வோர் பெரும்பாலும் இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருப்பர், மற்றும் குறைந்த செலவில் படிப்பதற்காக செல்வர் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முதன்மை மருத்துவக்கல்லூரிகளில் தகுதியற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில், இந்தக் கல்லூரிகளில் இடங்களைப் பெற முடியாத மற்றும் குறைவான மாணவர்களில் சேர்க்கை பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து பல வழக்குகள் அரசுக்கு எதிராக தொடுக்கப்படும். இது, தெரிந்தே தகுதியுள்ள மாணவர்களின் மருத்துவப்படிப்புக்கான சீட்டை பறிப்பதற்கு சமமாகும்” என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.