உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் முருங்கைகாய் மற்றும் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதியில் பருத்தி, நெல், மக்காச்சோளம், மிளகாய், சோளம், கம்பு மற்றும் பயறு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. உசிலம்பட்டி பெரிய செம்மேட்டுப்பட்டி பகுதியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். தற்போது கத்தரிக்காய் மற்றும் முருங்கைகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது.
கத்தரிக்காயை பறித்து விவசாயிகள் உசிலம்பட்டி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கத்தரிக்காய் விலை உசிலம்பட்டி மார்க்கெட்டில் கிலோ ரூ.30 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எங்கள் பகுதிக்கு 58 கிராம கால்வாய் தண்ணீர் வந்தால் மேலும் பல காய்கறிகளை உற்பத்தி செய்ய வசதியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.