"உதயசந்திரன் ஐஏஎஸ் திமுகவினரை விட மோசமாக செயல்படுகிறார்" – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

உதயசந்திரன் ஐஏஎஸ் திமுகவினரை விட மோசமாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”கடந்த ஒன்றரை ஆண்டில் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மின்கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தாமல் இருந்து இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அதிமுக ஆட்சியில் வாரம் தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை முடுக்கி விடுவோம். இந்த ஆட்சியில் அப்படி ஒன்றும் செய்வதில்லை.
image
எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் என்ன இருக்கிறது.? எதற்காக என் வீட்டில் மூன்று முறை ரெய்டு.? ஜெயலலிதா மறைவிற்கு பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயன்ற போது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தோம். கட்சிக்கு விசுவாசமாக இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தோம். ஒ.பி.எஸ்-ஐ கட்சியில் இணைக்கவும், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைவதற்கும் முக்கிய காரணமாக இருந்தேன். என் கட்சியை ஆட்சியை காப்பாற்ற உணர்வு பூர்வமாக செயல்பட்டோம். அதற்கு தான் இத்தனை ரெய்டு என் வீட்டில் செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம். என் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தி என்ன எடுத்தீர்கள்?. பத்து ஆண்டு கால ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை, லஞ்சம் இல்லை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தோம். காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது.
image
என் வீட்டில் ரெய்டு நடந்தபோது காவல் துறையினர் எம்.எல்.ஏக்களை கையை பிடித்து இழுத்து தள்ளினார்கள். தொண்டர்களை தாக்கினார்கள். காவல் துறைக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?. முதல்வர் ஸ்டாலினுக்கு காவல் துறை கைகூலியாகவும், அடிமையாகவும் செயல்படுகிறது. எங்கள் சகோதரர்கள் மீது கை வைத்த காவல் துறையினர் சட்டையை கழட்டாமல் விட மாட்டோம். இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகாரளிப்போம். கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றை தடுக்க காவல்துறைக்கு தைரியம் இல்லை. காவல் துறை அத்துமீறலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மு.க.ஸ்டாலின் என்ன கடவுளா? இவரை போல் எத்தையோ பேர் முதல்வராக வந்துள்ளனர்? ஆனால் இவ்வளவு மோசமான பழிவாங்கும் வஞ்சகர்கள் இருந்ததில்லை. கொலுசு மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இன்று எவ்வளவு வரியை உயர்த்தியுள்ளனர்? குழந்தைக்கு பொம்மை வழங்குவது போல் பணம் வழங்கி இன்று வரியை உயர்த்தியுள்ளனர். திமுக அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாரி குவிக்கின்றனர்.கந்துவட்டி போல் வசூலிக்கின்றனர். 50 ஆயிரம் கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் லஞ்சம் பெற்றுள்ளது. யார் யாரிடம் வாங்கினீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் சும்மா விட மாட்டோம்.
image
கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சிலம்பரசன் தன்னை சினிமா சிம்பு போல் நினைத்துள்ளார். இதுபோல எத்தனை பேரை பார்த்துள்ளோம்?, கட்சி பெண்களையும் வழக்கறிஞர்களையும் தொட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?, நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவல்துறைக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம்?, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவைக்கு என்ன செய்தார்கள்?, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். எந்த வேலையையும் திமுக அரசு செய்யவில்லை. சாலைகள் போட மாநகராட்சி நிர்வாகத்திற்கு வக்கில்லை. கோவை ஆட்சியர் பொம்மை போல் உள்ளார். திமுகவினரின் ஒரே கொள்கை கொள்ளை அடிப்பது மட்டுமே.
திமுக மக்களை பற்றி கவலைப்படாத அரசு. கட்டுமான அப்ரூவல் ஜி ஸ்கொயருக்கும் மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் உட்பட இன்று எந்த தரப்பும் நன்றாக இல்லை. மீடியாக்கள் ஸ்டாலினை கைவிட்டால் ஆட்சி முடிந்து விடும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவர்.
இதற்கு மேலாவது உயர்த்திய மின் கட்டணத்தை நிறுத்தி வையுங்கள்.
image
உதயசந்திரன் ஐஏஎஸ் திமுகவினரை விட மோசமாக செயல்பட்டு வருகிறார். காவல் துறைக்கு அவர் தான் செயலாளர். ஸ்டாலின் குடும்பத்திற்கு அதிகாரிகளிடம் இருந்து பணம் வசூலித்து தருவது உதயசந்திரன் வேலை. முடிந்தால் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை செய்யுங்கள். இத்தனை பழிவாங்கும் செயலை செய்வது இந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தான். கோடநாடு வழக்கு உள்ளிட்ட பொய் வழக்கிற்கு காரணம் உதயசந்திரன். காவல்துறை மோசமாக உள்ளது. இந்த ஆட்சி விரைவில் மண்ணை கவ்வும். இதற்கு எல்லாம் பதில் சொல்லும் காலம் வரும்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.