லக்னோ, உத்தர பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் சுவர் இடிந்து, இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.உ.பி.,யின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டியது. லக்னோ அருகே தில்குஷா என்ற இடத்தில், ராணுவ முகாமில் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் நேற்று அதிகாலையில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதன் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். ராணுவத்தினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அடுத்து, உன்னாவ் மாவட்டம் கந்தா கிராமத்தில் பலத்த மழை காரணமாக ஒரு வீட்டின் சுவர் இடிந்து, அந்த வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள், அவர்களின் தாய் மற்றும் குடும்பத்தினர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பதேபூரில் மூன்று பேர், பிரயாக்ராஜ் நகரில் இருவர் மற்றும் சிதாபூர், ரேபரேலி, ஜான்சி ஆகிய இடங்களில் தலா ஒருவர் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, உ.பி., கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement