கொழும்பு,
சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ சமீபத்தில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய-சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாங்கள் ராணுவக் கூட்டணியில் பங்கேற்கவில்லை. பசிபிக் பெருங்கடலின் பிரச்சினைகள் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இது ஒரு மோதலாகவும், போர் நடக்கும் பகுதியாகவும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது’ என தெரிவித்தார்.
அம்பன்தோட்டா துறைமுகம் ஒரு ராணுவ துறைமுகம் அல்ல என்றும், ஒரு வணிக துறைமுகமாக இருந்தாலும், பலர் தேவையற்ற முடிவுகளுக்கு வருவது நமது முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் கூறிய விக்ரமசிங்கே, இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் துரதிஷ்டவசமாக இலங்கையை அம்பன்தோட்டாவுக்கான குத்தும் பையாக மாற்றியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.