எனது படத்தை மார்பிங் செய்துள்ளனர்: ரன்வீர் சிங்

பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் கடந்த ஜூலை மாதம் தனது நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படத்தை பகிர்ந்து பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தி, அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக செம்பூர் போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகார் குறித்து, கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது, அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் வெளியிட்ட படங்கள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. என்று கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்போது அவரது வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அதில் ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது : நான் போட்டோ சூட் நடத்திய போது உள்ளாடை (ஸ்கின் டிரஸ்) அணிந்து இருந்தேன். எனவே நான் போட்டோ சூட் எடுத்து பகிர்ந்த படங்களில் நிர்வாணமில்லை. இதேபோல அந்தரங்க உறுப்பு தெரிவது போல உள்ள நிர்வாண படம் நான் பதிவேற்றம் செய்தது இல்லை. அது மார்பிங் செய்யப்பட்ட படம். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டோ சூட்டின் போது உள்ளாடையுடன் எடுத்த படங்கள், மார்பிங் செய்யப்பட்டதாக கூறப்படும் நிர்வாண படத்தையும் ரன்வீர் சிங் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார். அதோடு போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவையும் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் ரன்வீர் சிங்கின் நிர்வாண படம் மார்பிங் செய்யப்பட்டதா? என்பதை உறுதி செய்ய அந்த படத்தை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

ரன்வீர் சிங் ஒப்படைத்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டாலோ, மேக்கிங் வீடியோ உண்மை என்றாலோ ரன்வீர் சிங் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.