குருகிராமில் 14 வயது சிறுமி ஒருவர் ஒருநாளில் 10 – 15 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செக்டார் 49 பகுதியில் வசித்துவரும் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்துள்ளார். அப்போது ஒரு மாதத்திற்கு முன்பு நிர்வாணா நீதிமன்ற வளாகத்தில் வைத்து பூஜா என்ற பெண்ணை சந்தித்திருக்கிறார். அவர் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கவே சிறுமியும் அவரை நம்பிச் சென்றுள்ளார். அவர் மருத்துவர் ஒருவரின் க்ளினிக்கில் சிறுமிக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் மருத்துவர் சிறுமியை இரண்டே நாளில் வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்.
மீண்டும் வேலை தேடிக்கொண்டிருந்த சிறுமியை 15 நாட்களுக்குப் பிறகு சந்தித்த பூஜா, இந்த முறை அவரை ஓமாக்ஸ் குருகிராம் மாலிலுள்ள கிங் ஸ்பாவில் வரவேற்பாளராக சேர்த்து விட்டிருக்கிறார். அது தனது அத்தை ஜூமாவின் ஸ்பா என்றும் கூறியிருக்கிறார். அங்குதான் சிறுமி பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவித்திருக்கிறார்.
புதன்கிழமை இரவு செக்டார் 51 காவல்நிலையத்தில் சிறுமி புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ’’நான் ஸ்பாவில் வேலைக்குச் சேர்ந்தபிறகுதான் சோதனைக்காலம் ஆரம்பித்தது. நான் வேலைக்கு சேர்ந்த முதல்நாளிலேயே என்னை கட்டாயாப்படுத்தி அறைக்குள் அனுப்பினார்கள். அங்கு வந்த ஒரு நபர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். உடனே அந்த வேலையிலிருந்து நிற்பதாகக் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை வீடியோ எடுத்துவைத்து மிரட்டி வரவழைத்தனர். அதனால் எனக்கு விருப்பமில்லாமலேயே மேலும் 5 நாட்கள் வேலைக்குச் சென்றேன்.
அந்த 5 நாட்களும் ஒருநாளில் 10 – 15 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். அப்போதே போலீசில் புகார் கொடுக்க வந்தேன். ஆனால், என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களில் ஒருவரான ரூபல் என்பவர் என்னை திருமணம் செய்துகொள்வார் என்று வாக்குக்கொடுத்து கட்டாயப்படுத்தி புகாரை திரும்பப்பெற வைத்தனர். ஆனால், புகாரை திரும்பப் பெற்றபின் திருமணம் செய்ய மறுத்ததுடன், என்னையும் எனது குடும்பத்தாரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெற்றோரின் உதவியுடன் போலீசில் இரண்டாம்முறை புகாரளித்துள்ளார் சிறுமி. அதன்பின்னரும் பூஜா, ஜுமா, ரூபல் மற்றும் சதாம் ஆகிய 4 பேரும் சிறுமியையும், அவர் குடும்பத்தாரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் புதன்கிழமை இரவு சிறுமி காவல்நிலையத்தை அணுகி தனக்கு நடந்ததை எடுத்துக்கூறவே, புகாரின் அடிப்படையில், இந்திய சட்டப்பிரிவுகளான 376-டி (கும்பல் பலாத்காரம்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் 34 (பொது நோக்கம்) IPC மற்றும் POCSO சட்டத்தின் பிரிவுகள் 6, 13, 14, 17 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பூஜா, ஜுமா, ரூபல் மற்றும் சதாம் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறுமி தனது வயது எவ்வளவு என்பது குறித்த முறையான ஆதாரத்தை வழங்கவில்லை என்றும், இதுகுறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறியிருக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM