திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை உடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்துள்ளார். அந்தப் பெண் மது அருந்தியது மட்டுமின்றி, அந்த குழந்தைக்கும் மது ஊற்றி கொடுத்ததாக அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள், பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு பகுதிக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தபோது, குழந்தை பிறந்து 13 நாள் ஆகிறது என்றும் கரூரில் பிறந்தது என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த காவலர் உடனடியாக பெண் காவலருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த பெண் காவலர் அந்தப் பெண்ணின் கையில் இருந்து குழந்தையை மீட்டனர். அப்போது, குழந்தை மயக்கத்தில் இருந்ததை காவலர்கள் அறிந்தனர்.
மேலும், அந்தப் பெண்மணி தரையில் இருந்து எழுந்தபோது, அவர் மடியில் இருந்து இரண்டு மது பாட்டில்கள் கீழே விழுந்தன. இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அதீத மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக, காவலர்கள் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அந்த குழந்தை சுமார் 2.60 கிலோ எடை இருந்தது. மேலும், அது ஆண் குழந்தை என்றும் பிறந்து ஒரு மாதத்திற்குள் தான் இருக்கும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பெண்மணி போதையில் அது தன் குழந்தை என சொல்லிக் கொண்டே நடக்க முடியாமல் சாலையில் தன்நிலை மறந்து, விழுந்தது பேருந்து நிலைய பகுதியில் சிறு சலசலப்பை உண்டாக்கியது. மேலும் அந்தப் பெண்மணி, குழந்தையை கையில் வைத்திருந்தபோது, குழந்தையின் கைகளை திருகி வளைத்து கொடுமை செய்ததாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணை காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இரவு நேரத்தில் அந்த பெண்மணி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழந்தை யாருடையது, அந்த குழந்தை கடத்திவரப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.