தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். அப்போது மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றவில்லை. ஆனால் தற்போது அப்படியில்லை. குடிநீர் வரி, சொத்து வரியை அதிகப்படுத்தினர். தற்போது மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகப்படுத்தியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைந்ததால் எங்கள் மீது கோபம். கொழுசை கொடுத்து வரியை ஏற்றி விட்டனர். எங்கு பார்த்தாலும் திமுக ஆட்சியில் லஞ்சம். இந்த ஆட்சி மக்களை சுரண்டும் ஆட்சி. 50,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ளது திமுக அரசு. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் என்று குற்றம்சாட்டினார். பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தான் ஸ்டாலின் செயல்படுகிறார். அதற்கு உறுதுணையாக ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். தற்போது உள்ள அமைச்சர்கள் கொள்ளையடிக்கும் அனைத்து பணத்தையும் திமுக குடும்பம் வாங்கி கொள்கிறது. இதற்கும் உதயச்சந்திரன் தான் உறுதுணையாக இருக்கிறார். அவர் ஒரு திமுககாரர் போல் செயல்படுகிறார்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணை கூட உதயச்சந்திரன் தூண்டுகோளில் தான் நடக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படி நடந்து கொள்ளக் கூடாது. அதிமுக நிர்வாகிகள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஒரு ஆலோசனை கூட்டமே தினமும் நடத்துகிறார்கள் என்று பகீர் கிளப்பினார். வரும் 2024 மக்களவை தேர்தலில் 40க்கு 40ல் வெல்வோம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் வென்று காட்டுவோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாநகர காவல்துறை டி.சி சிலம்பரசன் சினிமாவில் நடிக்கும் சிலம்பரசனா? கட்சி பெண்கள் மீதும், எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கை வைக்கிறார். அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நாங்கள் இதை மறக்க மாட்டோம். சாலை போட வக்கில்லை. ஆட்சியர் பொம்மை போல் உள்ளார். திமுக கோவைக்கு ஒன்றும் செய்யவில்லை.
பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் உள்ளன. மோசமான பொங்கல் பரிசு கொடுத்து வரிகளை உயர்த்தி உள்ளனர். ஜி ஸ்கொயருக்கு மட்டும் அப்ரூவல் கொடுக்கின்றனர். மற்றவர்களை மிரட்டி அரசு நடத்துவதாக குறிப்பிட்டார். திமுக குடும்பம் என்றைக்குமே எதிரி தான். அதனால் தான் எனது வீட்டில் ரெய்டு நடத்தினர். சோபா, சேர் செட்டுகளை கூட காவல்துறையினர் எண்ணி சென்றனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு – அமைச்சர் கேள்வி
ரெய்டின் போது காவல்துறையினர் எம்.எல்.ஏ.,க்களை தள்ளி விடுகின்றனர். தொண்டர்களை, நமது சகோதரிகளை சேலையை பிடித்து தள்ளி விட்டனர். காவல்துறைக்கு கடுமையான கண்டனங்கள். சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் சட்டையை கழட்டாமல் விட மாட்டேன். காக்கி சட்டை போடவே முடியாது. நாங்கள் மனித உரிமை கமிஷனுக்கு செல்ல போகிறோம் என்று கூறினார்.