புதுச்சேரி: டெலிபோன் ஆபரேட்டர் பணி எனக்கூறி, புதுச்சேரி இளம் பெண்ணை, கம்போடியா நாட்டை சேர்ந்த மோசடிக் கும்பலுக்கு விற்பனை செய்த ஏஜன்டை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண்; திருமணம் ஆனவர். பட்டதாரியான இவர், வேலையின்றி வீட்டில் இருந்தார்.கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்தபோது, தனியார் ‘டிவி’ சேனலில் கம்போடியா தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.1 லட்சம் என விளம்பரம் வந்தது.
அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை, அந்த பெண் தொடர்பு கொண்டார். எதிர் முனையில் பேசிய நபர், ‘எனது பெயர் முருகன், புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர். ரூ.3.25 லட்சம் கட்டினால், தொலைபேசி அழைப்பாளர் பணி வாங்கித் தருகிறேன்’ என கூறினார்.
அதனை நம்பி அப்பெண், முருகனிடம் பணத்தை கொடுத்தார்.முருகன், இளம் பெண்ணை சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு முருகன் கூறிய கம்பெனிக்கு சென்றபோது, தொலைபேசி அழைப்பாளர் பணி வழங்காமல், மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கூறி உள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், மோசடி வேலையை செய்ய மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கம்பெனியின் மேலாளர் அட்டிடோ மற்றும் ஜான் ஆகிய இருவரும், உன்னை (இளம்பெண்ணை) ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 500க்கு விலைக்கு வாங்கி உள்ளோம். நாங்கள் சொல்லும் வேலையை செய்யாவிட்டால், விபசார கும்பலிடம் விற்று விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், தனி அறையில் அடைத்து, மின்சாரம் பாய்ச்சி துன்புறுத்தினர். அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.இந்நிலையில், அந்த இளம் பெண் அங்குள்ள இந்தியர் ஒருவர் உதவியுடன் அங்கிருந்து தப்பி புதுச்சேரிக்கு வந்தார்.தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து, கடந்த 12ம் தேதி டி.ஜி.பி.,யிடம் புகார் செய்தார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்குமாறு, டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் உத்தரவிட்டார்.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மேற்பார்வையில், எஸ்.பி., பழனிவேல் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்கு பதிந்தனர்.முதலியார்பேட்டையை சேர்ந்த ஏஜன்ட் முருகனை நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் கைது செய்து, விசாரித்தனர்.அதில், இளம்பெண்ணை தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு அனுப்புவதாக கூறி, மோசடி கும்பலிடம் விற்பனை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். நேற்று காலை முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் அளித்த தகவலின்பேரில், கூட்டாளி ராஜ்குமார் என்பவரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.மேலும், கம்போடியாவில் உள்ள ஜான் மற்றும் அட்டிடோ ஆகியோரை கைது செய்திடவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்