சென்னை: மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் கலைஞரின் ‘பேனா’ சிலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மற்றும் அதற்கான செலவு உள்ளிட்ட திட்டமதிப்பீடுகள் குறித்து ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்த திட்டத்தின் மீது உரிய ஆய்வுகள் செய்து அதற்கு அனுமதி வழங்கும் வகையில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் சார்பில் வல்லுநர் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைகள் மீது அந்த குழு உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தற்போது மெரினா கடற்கரையில் பேனா சிலை நிறுவ அனுமதி அளித்துள்ளது.ஒன்றிய அரசின் வல்லுநர் குழு கடந்த மாதம் நடத்திய வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தின் வழியாக தமிழக அரசு அனுப்பிய திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக பரிந்துரைகளின் பேரில் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு நிறுவ உள்ள பேனா நினைவுச் சிலை மெரினா கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் வைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் ரூ. 80 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நினைவுச் சிலை கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரத்தை விட சில அடி கூடுதலாகவும் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்குள் அமையும் பேனா சிலையை பார்வையிட வரும் பார்வையாளர்கள் மெரினா கடற்கரையில் இருந்து 650 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட பாலத்தின் வழியாக சென்று அங்கு அமைக்கப்படும் 42 மீட்டர் உயர பேனா சிலையை பார்க்கலாம். இது தவிர சில மென்மையான வாகனங்களிலும் சென்று பார்க்கவும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.