கீழடி அருகே அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் நெல்மணிகள்

திருப்புவனம்: கொந்தகையில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள், முதன்முறையாக நெல்மணிகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்தபோது 74 சூதுபவள மணிகள் புதைவிட தள ஆய்வில் முதன்முதலாக கிடைத்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் சில முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டன. ஒரு தாழியினுள் இறந்தவரின் எலும்புகளுடன், சிறியதும், பெரியதுமான 19 சுடுமண் குடுவைகளில் இறந்தவருக்கு பிடித்தமான பொருட்கள் வைத்து புதைக்கப்பட்டிருந்தது. அத்துடன் தாழிக்குள் மட்கிய நிலையில் நெல்மணிகளும், உமிகளும் அதிக அளவில் இருந்தன. இதன் வாயிலாக தாழிக்குள் இறந்தவர்களுடன் நெல்மணிகளையும் வைத்து முன்னோர்கள் புதைத்துள்ளது உறுதியாகி உள்ளது. கீழடி அகழாய்வில் நெல்மணிகள் கிடைப்பது இதுவே முதல்முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.