குலாம் நபி ஆசாத்திற்கு கொலை மிரட்டல்: ஆயுதங்களைக் கைவிட வேண்டுகோள் விடுத்த நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

அனந்த்நாக்: தீவிரவாதிகள் ஆயுத கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, தீவிரவாத குழு ஒன்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவருமான குலாம் நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதுதொடர்பாக அவர் காஷ்மீர் முழுவதும் பொதுக்கூட்டங்களும் நடத்தி வருகிறார். அப்படியான பொதுக்கூட்டம் ஒன்றில் வியாழக்கிழமை பேசிய குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் தங்களின் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் பாஜகவிற்காக செயல்படும் துரோகியாக மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ள தீவிரவாதக் குழு ஒன்று குலாம் நபி ஆசாத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய குலாம் நபி ஆசாத், “துப்பாக்கி கலாச்சாரம் எல்லா தலைமுறையினரையும் பாதித்துள்ளது. இந்த பள்ளத்தாக்கில் இனியும் இளைஞர்கள் இறந்து போவதை பார்க்க நான் விரும்பவில்லை. துப்பாக்கி ஏந்தியுள்ளவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எந்த பிரச்சினைக்கும் துப்பாக்கி தீர்வைத் தராது. அவை அழிவையும் துயரங்களையும் மட்டுமே கொண்டு வரும்.

இந்தப் பள்ளத்தாக்கில் இனியும் ரத்தம் சிந்தப்படுவதையும், இளைஞர்களின் உயிரற்ற உடல்களையும் நான் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். மேலும் ” தன்னுடைய சொந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளமுடியாத, தோல்வியைத் தழுவிய ஒரு நாடு, நமது மாநிலத்தையும் நாட்டையும் நரகமாக்கி அழிப்பதில் குறியாக உள்ளது என்று பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டினார்.

காஷ்மீரின் பாராமுல்லாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத், “சட்டப்பிரிவு 370 மீட்டெடுத்து காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்த்தைக் கொண்டுவருவதே என அரசியல் நோக்கம் என்று நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க விரும்பவில்லை. பிரிவு 370 திரும்பக் கொண்டு வர மக்களவையில் சுமார் 350 வாக்குகளும், மாநிலங்களவையில் 175 வாக்குகளும் தேவை. அந்த அளவிற்கான வலிமை எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை, பெறவுமில்லை. காங்கிரஸ் 50 க்கும் குறைவான இடங்களுடன் சுருங்கியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் பிரிவு 370 பற்றி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸின் மூத்த தலைவராகவும் முக்கிய முகமாவும் விளங்கிய குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் வர இருப்பதைத் தொடர்ந்து அங்கு புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.