கூரையை பிய்த்துக்கொண்டு கோடிகள் கொட்டியதாக சந்தோஷம்! சில மணிநேரங்களில் வங்கி கொடுத்த ஷாக்!

நமது நண்பரோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரோ திடீரென ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலோ, ஜாலியா சுற்றினாலோ என்னப்பா லாட்டரி அடிச்சுருச்சா? என்று கேட்போம். இதுபோல் லட்சத்தில் ஒருவருக்கு எப்போதாவது லாட்டரி அடிப்பதுண்டு. அதுபோல ஒரு சம்பவம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்திருக்கிறது. லாட்டரி என்றால் ஆயிரம் பத்தாயிரம் அல்ல; வெறும் லட்சமோ கோடியோ கூட அல்ல; ரூ.11,677 கோடி லாட்டரி அடித்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? அப்படி கோடிகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியிருந்தாலும் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை என்பதுதான் சோகம்.
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சாகர். இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பங்குச்சந்தையில் பணம் செலுத்தி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர் கோட்டாக் விதிமுறைகளை பின்பற்றி Demat கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் தனக்கு லாட்டரி அடித்தது எப்படி? தனது மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது எப்படி என்பதை அவரே விளக்கியுள்ளார்.
image
’’2022ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி எனது வங்கிக் கணக்கிற்கு ரூ. 116,77,24,43,277.10 வந்தது. அதில் இரண்டு கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஐந்து லட்சத்தை லாபமாக பதிவு செய்தேன். ஆனால் அன்று மாலை சுமார் 8 – 8.30 மணிக்குள் அந்தத் தொகையை வங்கி திரும்ப எடுத்துக்கொண்டது. அதன்பிறகு வங்கியிலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு குறுஞ்செய்தி வந்தது. அதில், ’மார்ஜின் புதுப்பிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆர்டர் செய்யலாம். ஆனால் காட்டப்படும் மார்ஜினானது புதுப்பிக்கப்படாது. சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் இதைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தது என வருத்தத்துடன் கூறுகிறார். அந்த ஒரேநாளில் ரமேஷிற்கு மட்டுமல்ல; இதேபோல் பலருக்கும் ஜேக்பாட் அடித்து ஏமாற்றியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.