கேரளாவில் 9வது நாளாக நடை பயணம்; தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு: சத்தீஸ்கர் முதல்வர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் இருந்து கடந்த 7ம் தேதி ராகுல் காந்தி எம்பி நடைபயணத்தை தொடங்கினார். 4 நாள் பயணத்தை முடித்துவிட்டு கேரளாவுக்கு திரும்பினார். தொடர்ந்து கடந்த 11ம் தேதி முதல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கியவர் நேற்று ஓய்வு எடுத்தார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர்கள், கொல்லம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து 9வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் இன்று காலை சுமார் 6.30 மணிக்கு தொடங்கினார்.

அதன்படி கொல்லம் போளயத்தோடு சந்திப்பில் இருந்து தெண்டர்கள் புடைசூழ ராகுல் காந்தி புறப்பட்டார். காலை சுமார் 11 மணி அளவில் கொல்லம் நீண்டகரை பகுதியில் இன்று காலை நடை பயணத்தை நிறைவு செய்தார். இந்த நடை பயணத்தின் போது சாலைகளின் இரு பக்கமும் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள ஒரு கடற்கரை சுற்றுலா விடுதியில் ஓய்வெடுத்தார்.
பிற்பகலுக்கு பிறகு கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த முந்திரி தோட்ட தொழிலாளர்கள், முந்திரி ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து புரட்சி சோஷலிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்தார். மீண்டும் மாலை சுமார் 5 மணி அளவில் சாவரா பஸ் நிலையத்தில் இருந்து நடைபயணத்தை தொடர்கிறார். இரவு சுமார் 7 மணி அளவில் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி லாலாஜி சந்திப்பில் இன்றைய நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.

சத்தீஸ்கர் முதல்வர் பங்கேற்பு
ராகுல்காந்தியின் இன்றைய 9வது நாள் நடை பயணத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெலும் பங்கேற்றார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். போளையத்தோடு சந்திப்பில் இருந்து ராகுல் காந்தியுடன் சேர்ந்து பூபேஷ் பாகெல் நீண்டகரை வரை நடந்து சென்றார். பூபேஷ் பாகெலுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருப்பதால் நடை பயணத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் எதிர்ப்பு இல்லை
ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கேரளாவில் மிக அதிகமாக 19 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் வெறும் 2 நாள் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தது. குஜராத் மாநிலம் வழியாக செல்லாதது ஏன் என்றும் ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ கூட்டம் நடந்தது. அதில் ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நடைபயணத்தை எதிர்க்க வேண்டாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.