கோவாவில் சிதறிய காங்கிரஸ்: தலைமையின்மை காரணமா… பாஜக ஸ்கெட்சா? – பின்னணி என்ன?!

பாஜக-வில் இணைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை பாஜக மிகத் தீவிரமாகச் செய்துவருகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் 11 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த திகம்பர் காமத்தும், லோபோவும் இரண்டு கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்குச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின.

பிரமோத் சாவந்த்

இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியடுத்துடன் அவர்கள் இருவர் மீதும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காது சபாநாயகர் காலம் தாழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே சூழலில், எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்த , மிச்சேல் லோபோவின் பதவியும் பறிக்கப்பட்டது.

சத்தியம் என்ன ஆச்சு!

இந்நிலையில், நேற்று முந்தினம் (14.09.22) காலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரைச் சந்தித்துப் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து, இந்த எட்டு பேரும், திகம்பர் காமத், மிச்சேல் லோபோ தலைமையில் பாஜக-வில் இணைத்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. மொத்தமிருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு பேர் பாஜக-வில் இணைத்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திகம்பர் காமத்

இதேபோல, கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்தார்கள். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, இம்முறை வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம், கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரமாட்டேன் என்று கோயில், தேவாலயத்தில் வைத்து சத்தியம் வாங்கப்பட்டிருந்தது. இந்த சத்தியம் குறித்து திகம்பர் காமத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான். மீண்டும் கடவுளிடம், ` ‘நான் என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன். ‘உனக்கு எது நல்லதோ அதைச் செய்’ என்றார்” என்று கூறினார்.

வந்தாரை வாழவைக்கும் பாஜக:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `பாரத் ஜோடோ யாத்ரா’ தொடங்கி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற யாத்திரை மேற்கொண்டுவரும் சமயத்தில் கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவல் செய்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், யாத்திரை செல்லும்போது அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 100 பேர், யாத்திரை செல்லாத மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில், கோவாவிலிருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு பேர் கட்சி மாறியிருப்பது காங்கிரஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் யாத்திரையில் கலந்துகொள்ளவாவது கோவாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கிறார்களா என மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “ஒரு சரியான தலைமை இல்லாமல், காங்கிரஸில் நடக்கும் குளறுபடிகளைக் கண்டு, நல்ல கட்சி எது என்று பார்த்து பாஜகவுக்கு வருகிறார்கள். எங்களை நோக்கி வருபவர்களை நாங்கள் அரவணைத்துக்கொள்கிறோம். விலை கொடுத்து வாங்குகிறோம் என்று சொல்வதே ஏற்புடையது அல்ல. அப்படியென்றால், காங்கிரஸ் கட்சியினர் விலை போகின்றவர்களா… அந்த கட்சித் தலைமை பலவீனமாக இருப்பதாய் உணர்ந்து எங்கள் கட்சிக்கு வருகிறார்கள். வந்தாரை வாழவைக்கும் கட்சி பாஜக” என்றார்.

இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர், இனியன் ராபர்ட்டிடம் பேசினோம். “பாஜக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மாற்றுக் கட்சியின் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் சொந்த பலத்தில் கட்சியை வளர்க்கத் துப்பு இல்லாதவர்கள், இப்படி மாற்றுக் கட்சி உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து கொண்டிருக்கிறார்கள். கட்சியின் மேல் கொள்கைப்பிடிப்பு இல்லாத சில சுயநலவாதிகளும் கட்சியை விட்டுச் செல்கிறார்கள். உண்மையில், அவர்கள் சென்றதால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் கிடையாது” என்றார்.

இனியன் ராபர்ட்

மேலும், “காங்கிரஸ் அன்று தொட்டு இன்று வரை ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இங்கிருந்து சென்றவர்கள்தான் பின்னாளில் பெரிதாக வருத்தப்படுவார்கள். உதாரணமாக, தமிழ்நாட்டில் நான்தான் காங்கிரஸ், நான் இல்லையென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். இன்று அவரின் கட்சிதான் இருக்குமிடம் தெரியாமல் போனது. இன்றளவும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுவாகத்தான் இருக்கிறது. பாஜகவிடம் எந்த தொலைநோக்கு திட்டமும் கிடையாது. அவர்கள் இப்படி மாற்றுக்கட்சி உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவது என்றைக்குமே அவர்களுக்குப் பலனளிக்காது” என்று முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.