‘க்யூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை; காங். தலைவரை தேர்வு செய்யும் 9,000 வாக்காளர்கள் யார்?.. பட்டியல் தயாரிப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியது

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வாக்காளர்களுக்கு ‘க்யூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டையை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் பட்டியலில் 9,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காகன தேர்தல்  நடைமுறைகள்  தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதனன் மிஸ்திரி மேற்பார்வையில்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்  பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 22ம்  தேதி முறையான தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது.

அப்போது வாக்காளர்கள்  பட்டியலும் வெளியிடப்படுகிறது. தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டால் வரும் அக்டோபர் 17ம் தேதி வாக்குப்பதிவு  நடைபெறும். இம்மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்புமனு தாக்கல்  செய்யலாம். வேட்பு மனுவை வரும் அக். 8ம் தேதி திரும்பப் பெறலாம். தேர்தல்  அனைத்து மாநில காங்கிரஸ் தலைமையகம் மற்றும் டெல்லி தலைமையகத்தில் நடத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  அறிவிக்கப்படும். அதன்பின் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டம்  நடத்தப்படும். புதிய காங்கிரஸ் தலைவர் மூலம் செயற்குழு, பொதுக்குழு,  மக்களவை, மாநிலங்களவை தலைவர்களை தேர்வு செய்வார்.

இதுகுறித்து தேர்தல் பணிக்குழு வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. வரும் 22ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. வாக்காளர்களுக்கு ‘க்யூஆர்’ கோடு வசதியுடன் கொண்ட லேமினேட் செய்யப்பட்ட தேர்தல் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் 9,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விபரங்கள் வாக்காளர் பட்டியல் தயாரானதும் பகிரப்படும். ஒவ்வொரு மாநில பிரதிநிதிகளுக்கும் அந்தந்த மாநில கமிட்டி மூலம் லேமினேட் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

அவர்களின் ஆவணம் ஸ்கேன் செய்த பின்னரே, அவர் வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும். அட்டையில் புகைப்படம் இல்லை என்றால், ஆதார் அட்டையை எடுத்துச் செல்லலாம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் 10 ஆதரவு பிரதிநிதிகளின் கையொப்பம் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களிடம் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதரவு பிரதிநிதிகள் வேறு எந்த மாநிலத்தில் இருந்தாலும், அதனை சரிபார்க்க உரிய அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும். இம்மாதம் 20ம் தேதி முதல் வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலை நேரடியாக சரிபார்த்துக்கொள்ள டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரசை பலவீனப்படுத்தும் பாஜக
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ராகுல்காந்தியே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும்பட்சத்தில், மூத்த தலைவர்கள் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் பிரியங்கா காந்தியை களமிறக்க சில மூத்த தலைவர்கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எப்படியாகிலும் வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல், அதற்கு முன்னதாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டப் பேரவை தேர்தல்கள் ஆகியன காங்கிரசின் தலைமை தேர்வை பொருத்தே அக்கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும். ஆளும் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் பலம் பெற்ற காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்காக பல மாநில காங்கிரஸ் தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் தங்கள் பக்கம் இழுத்து போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.