நடிகர் சிம்பு – கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் நேற்று வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சிம்பு – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளப் படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஜெயமோகன் எழுதிய ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிம்புக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.
மூத்த நடிகையான ராதிகா, சிம்புவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புக்காக வேலை தேடிச் செல்லும் சாதாரண இளைஞன், மும்பையின் டானாக மாறும் வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் என்றாலும், அதிரடி பஞ்ச் டயலாக் மற்றும் துப்பாக்கி சத்தம் இல்லாதது, ஏ.ஆர். ரஹ்மானின் இசை, சிம்புவின் எதார்த்தமான நடிப்பு ஆகியவை ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இதனால், இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே 9 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் திரைப் பயணத்தில் ‘மாநாடு’ வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் ஓப்பனிங்கும் நல்ல முறையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, வார நாட்களில் வெளியானாலும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் வார விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.