திருச்சி மேலப்புதூரில் மேலே ரயிலும், கீழே வாகனங்களும் செல்வது போன்ற சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்க பாதையானது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மேலே ரயில் பாலத்தை கடக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில் கடக்கும்வரை காத்திருந்து பிறகு செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
காரணம் ரயில் கடக்கும்போது சிறுநீர் கழிவுகளும், இதர நீர் கழிவுகளும் சாலையில் தெளிப்பதனால், அந்த சாலையில் ஏற்கெனவே சென்று தெளிவுபெற்ற வாகன ஓட்டிகள் சற்று முன்பாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு ரயில் செல்லும் வரை காத்திருக்கின்றனர்.
இதனால் சில நேரங்களில் போக்குவரத்து சிரமமும் ஏற்படுகிறது. புதிதாக மேலப்புதூர் பாலத்தை கடந்து செல்லும் நபர்கள், நிற்பவர்களை கேள்விக்குறியாக பார்த்துவிட்டுச் சென்று, பின்னர் தெளிவு பெறுவர்.
இது குறித்து அண்மையில் விகடன்.காமில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கத்துடன் நிலைமையை விவரித்து செய்தி பதிவிட்டிருந்தோம். விகடன் சுட்டிக்காட்டியதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் தற்போது அந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைத்து, வாகன ஓட்டிகள் சுரங்கபாதையில் முகம் சுளிக்காமல், அச்சமின்றி பயணிக்க வழிவகை செய்திருக்கின்றனர்.
தென்னக ரயில்வே அதிகாரிகள் பாலத்தின் அடிப்பகுதியில் சற்றே துருப்பிடித்திருந்த தகரத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, புதிதாக தகரங்களை பொருத்தியிருக்கின்றனர். அதனால், இனி ரயில்கள் செல்லும்போது மக்கள் எந்தவித அச்சமுமின்றி சுரங்கப்பாதையை கடந்து செல்லலாம். “பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த அவல நிலைக்கு விகடன் சுட்டிக்காட்டியதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது” என சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.