நாசிக்: மகாராஷ்டிராவில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு வேலை செய்யும் பெண் ஊழியரும், காரில் வந்த பெண்ணும் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னலை பார்க்க முடிகிறதோ இல்லையோ, சில கிலோமீட்டர் இடைவெளியில் கட்டாயம் ஒரு சுங்கச்சாவடியை பார்த்துவிடலாம். இவ்வாறு அதிக அளவில் சுங்கச்சாவடிகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணத்துக்கு என்றே ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் வைக்கப்படும் சுங்கச்சாவடி, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அகற்றப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் பல சுங்கச்சாவடி உரிமையாளர்கள் இந்த விதியை பின்பற்றுவதில்லை. இதனால் பல சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயங்களில் பொதுமக்களால் சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுபோன்ற ஒரு சுங்கச்சாவடி தகராறு தான் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிம்பல்கான் சுங்கச்சாவடிக்கு நேற்று காலை காரில் ஒரு பெண் வந்துள்ளார். அப்போது அவரிடம் சுங்ககட்டணம் செலுத்துமாறு அங்கிருந்த பெண் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், “சில கிலோமீட்டருக்கு முன்புதான் ஒரு சுங்கச்சாவடியில் பணம் செலுத்தினேன். அதற்குள்ளாக இங்கும் பணம் கேட்கிறீர்களே..” என வினவியுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் ஊழியர், அதெல்லாம் தனக்கு தெரியாது என்றும், இங்கிருந்து செல்ல வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி இரு பெண்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் அந்த சண்டையை தடுக்க முன்வரவில்லை. மாறாக, அங்கிருந்த ஆண்கள் பலரும் ஏதோ சுவாரசியமான சம்பவம் நடப்பதை போல அவர்களின் சண்டையை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர், சுங்கச்சாவடி பெண் ஊழியர்கள் வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்களை விலக்கி விட்டனர். இதில் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.
இரண்டு பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த சண்டையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஆண்களை கடுமையாக சாடி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.