ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 77%ஆக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியாவில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம். ஆனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பும் பெறப்பட்டுள்ளது. இந்த 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
3 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பாஜக அரசு, முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது. இது உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு அளவு கோலான 50%-த்தை மீறுவதாகும். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை; அது ஒன்றும் சலுகை அல்ல; இந்த இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை கொண்டு வருவது என்பது இடஒதுக்கீட்டு முறையேயே கேள்விக்குள்ளாக்கும் சதிச்செயல் என்றும் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடியாக, அரசு வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 77% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அம்மாநில அமைச்சரவை வழங்கி உள்ளது. இப்புதிய இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் எஸ்சி-12% ; எஸ்டி-28% ; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 15%; இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12%; பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஜார்க்கன்ட் மாநிலத்தில் எஸ்சி-10% ; எஸ்டி-26% ; பிற்படுத்தப்பட்டோருக்கு 14% என்கிற இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க முறைகேடில் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவி பறிக்கப்படும் நிலைமை உள்ளது. இதற்காக தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் ஹேமந்த் சோரன். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை இடஒதுக்கீடு எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.