தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர்
நேற்று (செப்டம்பர் 15) அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பிற மாவட்டங்களில் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , துறையூர் ஒன்றியம், நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் கோட்டை துவக்கப்பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து இந்த திட்டத்தினை துவக்கி வைத்தனர்.