புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அதிக அளவில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, புதிய நடைமுறையை தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிமுகம் செய்தார். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமர்ந்து ஒவ்வொரு அமர்விலும் உள்ள பொதுநல வழக்குகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, குற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவில், ‘‘புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பட்டியல் நடைமுறை, இந்த வழக்கில் போதிய நேரத்தை அளிக்கவில்லை. மாலை நேரத்திலும், விசாரணைக்கு ஏராளமான வழக்குகள் உள்ளன. அதனால் இந்த வழக்கு, நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
புதிய நடைமுறைப்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு வெவ்வேறான பணி அமர்வு முறைகளில் பணியாற்றுகின்றனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிபதிகள் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்க வேண்டும்.
செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்குகளை விசாரிக்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் விரிவான வழக்குகளை காலை முதல் மதியம் 1 மணி வரை விசாரிக்க வேண்டும். உணவு இடைவேளைக்குப்பின் நீதிபதிகள் இருவர் அடங்கிய அமர்வில் பொதுநல வழக்குகள், மாற்றுதலாகி வந்த வழக்குகள், புதிய வழக்குகள் என மாலை 4 மணி வரை 20 முதல் 30 வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது. இது நீதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் அறிமுகம் செய்த புதிய வழக்கு விசாரணை முறையால் இதுவரை மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
13 நாட்களில் 3,500-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளும், 250-க்கும் மேற்பட்ட வழக்கமான வழக்குகளும், மாற்றுதலாகி வந்த 1,200க்கும் மேற்பட்ட வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.