நான் முதல்வராக இருந்த போது ஏழு சட்டக்கல்லூரிகளையும், 11 மருத்துவக் கல்லூரிகளையும் கொண்டு வந்தேன், திமுக ஆட்சிக்கு வந்த இந்த 15 மாதங்களில் ஒரு கல்லூரியைக் கூட கொண்டு வரவில்லை என்று
கூறினார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தின. சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “32 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி அதிமுக தான். கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அதனால் அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழ்நாட்டில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர் எம்.ஜி.ஆர்.
இதனை தொடர்ந்து ஜெயலலிதா கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது. நான் முதலமைச்சராக இருந்த போது 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தேன். திமுக அரசு பதவியேற்று 15 மாதங்கள் ஆகியும் ஒரு கல்லூரியை கூட கொண்டு வரவில்லை.
எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவிக்கும் போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். அண்ணா பெயரில் இயங்கு வரும் ஒரே கட்சி அதிமுக தான்.
நாள் தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். அதனை தொடர்ந்து மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். அம்மா உணவக்கத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள். மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது” என்று கூறினார்.