'திமுக கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி' – எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

அதிமுகவை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல மறைந்து போவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ” 2 ஆண்டு காலம்  தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த  கட்சி அதிமுக. கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழகத்தில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர் எம்.ஜி.ஆர்.
தொடர்ந்து  ஜெயலலிதா  கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கி கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது. நான் முதல்வராக இருந்தபோது  7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தேன். ஆனால் திமுக அரசு 15 மாதம் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை.

image
எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவிக்கும்போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். அண்ணா பெயரில் இயங்கி வரும் ஒரே கட்சி அதிமுக தான். நாள் தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அம்மா உணவகத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள். மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  ஆகிய மூவரும் தான். மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க  அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி உள்ளது. கொரோனாவுக்கு பிறகு மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருமானம் ஈட்டி வந்த சூழ்நிலையில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தி உள்ளது.
அதிமுகவில் தொண்டன் தான் தலைவர். இந்துகளை பற்றி சொல்லக்கூடாத கீழ்த்தரமான வார்த்தையை சொல்லி இருக்கிறார் ஆ.ராசா. அவர்  சொன்ன வார்த்தை திமுக தலைவர் குடும்பத்திற்கும் பொருந்துமா? என்று நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள்.
15 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பலன் வேதனையும் துன்பமும் தான். உழைப்பாளியை கேட்டால் தான் AM, PM என்றால் என்னவென்று தெரியும், வாக்கிங் போவது, சைக்கிளிங் போவது டீ குடிப்பதை மட்டும் தான் தமிழக முதலமைச்சரின் மினிட் டு மினிட் வேலை.

image
அதிமுகவின் தொண்டர்களை கூட தற்போதைய முதல்வர் ஸ்டாலினால் தொட முடியாது. திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் குடும்பம்தான் இயக்குனர்கள், நிர்வாகிகள், பங்குதாரர்கள். திமுக அரசு வரவு, செலவை மட்டும் தான் செய்கிறது. மக்கள் நலனில் அக்கறையில்லை. போராட்டத்திற்கு அதிகம் அனுமதி கொடுத்த கட்சி அதிமுக. ஆனால் திமுக அரசு ஒரு போராட்டத்திற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.
எதிர்கட்சிகளை திமுக அரசு நசுக்க பார்க்கிறது. ஆனால் ஸ்டாலினின் தந்தையாலேயே ஒடுக்க முடியவில்லை. ஒரு காலமும் அதிமுகவை ஒடுக்க முடியாது.  நான் தற்காலிக தலைவரா? ஸ்டாலின் தான் தற்காலிக தலைவராக இருந்தார். கட்சியில் தலைவர் பதவி கொடுக்க ஸ்டாலினின் தந்தையே ஸ்டாலினை நம்பவில்லை. அதனால் தான் கருணாநிதி உயிரோடு இருந்த போது செயல் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்தார். அப்பாவின் உழைப்பால் தான் ஸ்டாலின் முதலமைச்சர், கட்சி தலைவர் ஆகியுள்ளார். நிறைய பேர் சொல்கிறார்கள் ஒன்று சேர்த்து விடுவோம், ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று; அது நிச்சயம் நடக்காது” என்றார்.

இதையும் படிக்க: தில்லு முல்லு கட்சி என்பதை நிரூபித்த திமுக – பிரேமலதா விஜயகாந்த் பேச்சுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.