திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வயதான பக்தர்களின் வசதிக்காக கோயில் அருகே இருந்து பஸ் நிலையம் வரை பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மூத்த குடிமகன்கள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள், நோய்வாய்ப்பட்ட பக்தர்கள் ஆகியோர் ராம்பக்கீச்சா பக்தர்கள் தங்கும் விடுதி வழியாக கோயில் முகப்பின் அருகே உள்ள பையோ மெட்ரிக் பகுதி வரை கொண்டு வந்து விடப்படுகின்றனர். அங்கிருந்து தரிசன டிக்கெட்டை காண்பித்து சம்மந்தப்பட்ட பக்தர்கள் மிக சுலபமாக கோயிலுக்குள் சென்று சுவாமியை விரைந்து தரிசித்து விட்டு வெளியே வந்து விடலாம். பின்னர் அவர்களை, ராம் பக்கீச்சா விடுதியின் எதிரே உள்ள பஸ் நிலையம் வரை அதே பேட்டரி காரில் பாதுகாப்பாக கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர்.
மேலும், சில விஐபி, விவிஐபி பக்தர்களுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேட்டரி கார்களை நேற்று கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ரமேஷ்பாபு,தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். ரூ. 30 லட்சம் செலவில் 5 பேட்டரி கார்களின் சாவிகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவர் வழங்கினார். ஒவ்வொரு காரிலும் 8 பக்தர்கள் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடதக்கது.