புதுச்சேரி: விழுப்புரம்- நாகை தேசிய நான்குவழி பாதையில் பனைமரங்களை வெட்டவும், நீர்நிலைகளை மூடவும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
விழுப்புரம் – புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நான்கு வழி பாதை வேலை தற்போது ரூ.6300 கோடியில் நடந்து வருகிறது.
இதில் மதகடிப்பட்டு கிராமத்தில் ரோட்டிற்கு அருகாமையில் செல்லுகின்ற பிரெஞ்சு நீர்வழி பாதையை (ஓடை) மூட போவதாகவும், அதே போல் மதகடிப்பட்டு சந்தை தோப்பு அருகாமையில் சுமார் 1000 சதுர அடி கொண்ட குளம் மற்றும் திருவாண்டார் கோவில் இந்திய உணவு கழகம் எதிர்புரம் உள்ள 1000 சதுரடி கொண்ட குளம் ஆகியவற்றை மண்கொண்டு துர்த்தடைக்க எல்லை வரையரை செய்யப்பட்டது.
மேலும் திருபுவனை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஏரிக்கரை மற்றும் அதில் உள்ள சுமார் 700 பனை மரங்கள் ஆலமரம் போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அப்புறபடுத்த எல்லைகள் வரையரை செய்யப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கீதநாதன், பொதுச்செயலர் ரவி ஆகியோர் பொம்மியார் பாளையத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அலுவலகத்துக்கு சென்று மனு தந்தனர்.
பின்னர் விவசாயிகள் பொதுப்பணித்துறை முன்பு போராட்டம் நடத்தினர்.
இரு குளங்கள், ஏரி மற்றும் குளத்துக்கான நீர்வழிப்பாதைகள் மூடலால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் விவசாயம் பாதிக்கப்படும். அத்துடன் 550 மரங்களை அகற்றவும் கூடாது என்று கூறினர்.
புதுச்சேரி அரசு தரப்பில் பொதுப்பணித்துறை, ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு தந்தனர். நடவடிக்கை எடுக்கப்படாததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார்.
எதிர்மனுதார்களாக தேசிய நெடுஞ்சாலைஆணையம் தலைவர், புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், உறுப்பினர் செயலர், அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
8 மாதங்கள் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து தீர்ப்பாய உறுப்பினர்கள் புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் கோர்லபட்டி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்: “புதுச்சேரியில் சாலை விரிவாக்கப்பணிக்காக பனை மரங்களை வெட்டக்கூடாது.
அதேபோல் நீர்நிலைகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது. மதகடிப்பட்டு மற்றும் திருவண்டார்கோயில் குளங்கள் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்.
முக்கிய மதகடிப்பட்டு கிராமத்தையொட்டி செல்லும் பிரெஞ்சு நீர்வழிப்பாதை (ஓடை) பழைய முறையிலேயே தொடர வேண்டும். சாலை விரிவாக்கப்பணி முடிவடையும் போது முன்பு இருந்ததுபோல் ஓடை, நீர்நிலைகள் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் சலீம் கூறுகையில்: “விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியால் வழக்கு தொடரப்பட்டு பனைமரங்கள், நீர்வழித்தடங்கள், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பனைமரங்கள் நீர்வளத்தை பாதுகாப்பவை. தமிழகத்தில் பனை மரத்தை வெட்டக்கூடாது என்று ஆணை உள்ளது. புதுச்சேரியில் அதுபோல் இல்லை.
வனத்துறையில் இதர மரங்களை வெட்டுவதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும் என்ற ஆணையில் பனையையும் இணைக்க வேண்டும். நீர்நிலைகள், மரங்களை, சுற்றுச்சூழலை காக்க புதுச்சேரி அரசு குழு அமைக்க வேண்டும்.” என்று சலீம் கூறினார்.