நாட்டில் முதல்முறையாக தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: கனிமொழி கருணாநிதி பெருமிதம்

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மதுரையில் துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவங்கி வைத்தார்.

பின்னர் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்பி பேசும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 3400 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள், 66 பள்ளிகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் எல்லா பள்ளிகளிலும் எல்லா மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படும்’ என தெரிவித்தார். 

மேலும், ‘மாணவர்கள் உணவை மிச்சம் வைத்து விடாமல் அனைத்தையும் உண்ண வேண்டும், காலை உணவு உண்ணும் அவசியத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்து கூற வேண்டும், நன்கு உணவு உட்கொண்டால் மட்டுமேயான குழந்தைகள் நல்ல வளர்ச்சியையும், கல்வியையும் பெற முடியும்’ என்றார்.

மேலும் பிரின்ஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் இத்திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார் என பெருமிதத்துடன் கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று அரசு முறை பயணமாக மதுரை சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.