வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 60 காவலர்களுக்கு வேலூர் கோட்டை அகழியில் தமிழ்நாடு கமாண்டோ போலீசார் இன்று பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர். மக்களை பாதுகாப்பதே முதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும், கனமழை ஏற்படும்பட்சத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறை சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தில் மீட்பதற்காக காவல் துறை சார்பில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் வகையில் நீச்சல் பயிற்சி பெற்ற ஆயுதப்படையில் 20 காவலர்களும், சட்ட ஒழுங்கு பிரிவில் 40 காவலர்களும் என 60 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி பாலநாகதேவி உத்தரவின் பேரில் 3 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.
2வது நாளான இன்று வேலூர் கோட்டை அகழியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு கமாண்டோ படை பயிற்சியாளர் தர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர். அப்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? ரப்பர் படகுகளை எப்படி பயன்படுத்துவது? மீட்கப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது? ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி? குழந்தைகள் மற்றும் முதியவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டு வருவது?
விரைவாக எப்படி செல்வது? பதற்றம் அடையாமல் மீட்டு பணியை மேற்கொள்ளுவது எப்படி போன்ற பல்வேறு வகையான மீட்பு பணி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நாளை புயல் ஏற்பட்டு மரங்கள் வேராடு சாய்ந்தால் அவரை அப்படி வெட்டி அகற்றுவது? போக்குவரத்துகளை சீர்செய்வது? இடர்பாடுகளில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளனர்.