புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் இந்த தேசமே அச்சத்தில் உள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், இன்று (செப்.16) நாடு முழுவதும் தமிழகம் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மதுபான தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள், இத்தொழிலில் உள்ள சப்ளை செயின் தொடரில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகின்றது.
இதற்கிடையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், அண்மைக் காலமாக நடக்கும் சிபிஐ, அமலாக்கத் துறை ரெய்டுகள் குறித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த தேசம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் அச்சத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகிறது. அவை எல்லாம் நேர்மறையான விஷயங்கள் சார்ந்தது. ஆனால், இதுவரை பாஜக இப்படியொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளதா? இல்லவே இல்லை. இப்போது கூட நான் டெல்லி அரசுப் பள்ளிகளில் பயின்று நீட், ஜெஇஇ தேர்வுகளில் தேறியவர்களை சந்திக்கப் போகிறேன்.
மதுபான கொள்கை ஊழல் என்று ஒன்றைக் குறிப்பிட்டு அதில் பெரும் பணம் கைமாறியதாக கணக்கு சொல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு சொல்கின்றனர். துணைநிலை ஆளுநர் ஒன்று சொல்கிறார், சிபிஐ ஒரு கணக்கு சொல்கிறது, பாஜக முற்றிலும் வேறாக ஒரு கணக்கு சொல்கிறது. பாஜகவினர் 8000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது எனக் கூறுகின்றனர். எனக்கு உண்மையிலேயே இந்த ஊழல் குற்றச்சாட்டு பற்றி எதுவும் புரியவில்லை.
பாஜகவுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளாக்குகிறது. சதா சர்வ காலமும் சிபிஐ சோதனை பற்றி பேசுவதும், சிந்திப்பதையும் தவிர்த்துவிட்டு முக்கியமான மக்கள் பணிகளில் கவனம் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.