சென்னை: பாஜகவின் சாதனைக்கு திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கள் நலிந்த நிலையில் இருந்தபோதிலும், பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்ததால், அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலை மாற வேண்டுமென, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தன. தொடர்ந்து இவர்கள் கொடுத்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாஜக அலுவலகம் வந்து, தங்களது குறைகளை எடுத்துக்கூறினர். இதை, பிரதமரின் தனிப்பட்ட கவனத்துக்கும், மத்திய அரசின் எஸ்.டி. பிரிவு பதிவாளர் கவனத்துக்கும் கொண்டுசென்று, நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தமிழக பாஜக மேற்கொண்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
1965-ம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை, நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும்கூட நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியிலில் சேர்க்க முயற்சி எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது பிரதமரின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக செய்வது வேடிக்கையாக உள்ளது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் முகவரியை ஒட்டுவதுதான் திராவிட மாடலா?
மொழி, கல்வி, மதம் என அனைத்திலும் அரசியல் செய்து, மக்களை பதற்றத்தில் வைத்துக்கொண்டிருக்கும் திமுக அரசு, தங்களின் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, தற்போது, இந்தியா, ஹிந்தியா என்று நாடகத்தைத் தொடங்கி இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.