புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முக்கிய விழா நாட்களில், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்கள், வைணவக் கோயில்ளுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதை செயல்படுத்தும் விதமாக, ஆட  மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். இதைத் தொடர்ந்து, வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு வைணவக் கோயில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், மாமல்லபுரம்தலசயன பெருமாள், சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய கோயில்களுக்கு 2-வது பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து உறையூர் அழகிய மணவாள பெருமாள், ரங்கம் அரங்கநாதர், உத்தமர்கோவிலில் உள்ள புருஷோத்தம பெருமாள், குணசீலம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண பெருமாள்உள்ளிட்ட கோயில்களுக்கு ஒருபயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் சாபவிமோசன பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன்கோவில், நாச்சியார்கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள், திருச்சேறை சாரநாத பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, வடுவூர் கோதண்டராம சுவாமி ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மதுரையில் இருந்து அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில், ஒத்தகடை யோக நரசிம்மர், திருமோகூர் காளமேக பெருமாள், திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள், மதுரை கூடலழகர் உள்ளிட்ட கோயில்களுக்கு பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவில் பக்தர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன், கட்டணமில்லா சிறப்பு தரிசனம் மற்றும் பிரசாதம், கோயில் விவர கையேடு ஆகியவையும் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளம் அல்லது, 044 – 25333333, 25333444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.