மதுரையில் ரூ 600 கோடி மதிப்பில் புதிய டைடல் பார்க்; 10,000 பேருக்கு வேலை! – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ எனும் தலைப்பில் தென் மண்டல மாநாடு மதுரையில் நடைபெற்றது.

சிறு குறு தொழில் மாநாடு

முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், அரசு துறை செயலாளர்கள், தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும், கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகளை வழங்கினார்.

தொழில் நிறுவனங்கள் சொத்துக்களைப் பிணையமாக காட்டி வங்கிகளில் கடன் பெறுவதைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கிகளிலிருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியைத் தொடங்கி வைத்தார்.

குறுந்தொழில் குழுமம் அமைப்பதற்கான ஆணை கடந்த 22-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை விளாச்சேரியில் ரூ.4.03 கோடி மதிப்பில் பொம்மைக் குழுமம், தூத்துக்குடியில் 100% மானியத்துடன் ரூ.2.02 கோடி மதிப்பில் ஆகாயத் தாமரை குழுமம், விருதுநகரில் ரூ.3.40 கோடி மதிப்பில் மகளிர் விசைத்தறி குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கான ஆன்லைன் வசதியையும், பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு’ திட்டத்தை தொடங்கி அதற்கான லோகோவையும் வெளியிட்டார்.

கொரோனா பாதிப்பால் வங்கிகளில் கடன் பெறமுடியாமல் தவிக்கும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் CARE (தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம்) திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்திற்கு (Industry 4.0) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு பயிற்சி வழங்குவதற்காக ‘இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ்’ மற்றும் தமிழ்நாடு அரசின் Fame TN இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் முதல்வர்

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது.

மதுரையில் இயங்கிவரும் 50,000 குறு, சிறு நிறுவனங்கள் மூலம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவை. இந்த பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், தொழில் நிறுவனங்கள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டில் எளிதாக தொழில்புரிவோர் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது. அடுத்து முதல் இடத்தைப் பெறுவதுதான் இலக்கு.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு இயங்கி வருகிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு தரவுகளுக்காக ஒன்றிய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையும் தமிழக சிறு, குறு நிறுவனங்கள் துறையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

டைடல் நிறுவனம் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்க உள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் தொடங்கப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடுகிறது. இதன் மூலம் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.