இந்தியாவில் அழிந்து விட்டதாக கூறப்படும் சிவிங்கி புலி உயிரினம் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
சிவிங்கிப் புலி என்பது வேங்கை அல்லது சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும்.இந்தியாவில் அழிந்து விட்டதாக கூறப்படும் இந்த சிவிங்கி புலி உயிரினம் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் மூலமாக நமிபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட இருக்கும் நிலையில் அவற்றின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 1952-ல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
கடைசியாக சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் சால் வனப்பகுதியில் 1948-ல் ஒரு சிவிங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தான் இந்தியாவின் கடைசி சிவிங்கியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, சிவிங்கிப்புலி மறு அறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு சனிக்கிழமை (செப்.17) கொண்டுவரப்பட இருக்கின்றன.
இந்தச் சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்க நாடான நமிபியாவிலிருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து 3 சிவிங்கிப் புலிகள் மத்தியப்பிரதேசம் கொண்டுவரப்பட்ட குனோ தேசிய பூங்காவில் விடப்படுகிறது.
இந்தநிலையில், நமிபியாவிலிருந்து வரும் சிவிங்கிப் புலிகளின் வீடியோ படம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிவிங்கிப் புலிகள் தங்களின் சொந்த வாழ்விடத்தின் இயற்கையான சூழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா வரும் இந்தச் சிவிங்கிப் புலிகள் பிரதமர் மோடியால், அவரது பிறந்த நாளான செப்.17ம் தேதி இந்திய காடுகளுக்குள் திறந்து விடப்படுகின்றன. இதுகுறித்து சிவிங்கிப் புலி திட்டத்தின் தலைவர், எஸ்.பி. யாதவ் கூறுகையில், “இந்தியா வர இருக்கிற 8 சிவிங்கிப் புலிகளில் 3 மட்டுமே பிரதமர் மோடியால் அவைகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் திறந்து விடப்படும். மீதமுள்ள 5 சிவிங்கிப் புலிகளும் அவைகளுக்கான ஒதுக்கப்பட்ட மற்றொரு இடத்தில் திறந்து விடப்படும்” என்று தெரிவித்தார்.
கடந்த 1952-ல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்ததைத் தொடந்து அவைகளை இந்தியக் காடுகளில் மீண்டும் அறிமுகப்படுத்த இந்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்துவந்தது. இறுதியில் நமிபியா அரசுடன் 2022 ஜூலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, 5 பெண் சிவிங்கிகளும், 3 ஆண் சிவிங்கிகளும் ஜெட் விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக B747 ரக ஜம்போ ஜெட் விமானம் நமிபியா தலைநகரை சென்றடைந்துள்ளது. அங்கிருந்து வெள்ளிக்கிழமை சிவிங்கிப்புலிகளுடன் கிளம்பும் விமானம், சனிக்கிழமை காலை ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து சேரும். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.” என்று தகவல் வெளியாகி உள்ளது .