கிவ்:”ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. ரஷ்யா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்,” என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா கைப்பற்றிய பல இடங்களை உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார்.
இது குறித்து, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷ்யப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர்; பொதுமக்களையும் ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். இசியம் நகரில் மிகப்பெரிய குழியில் 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷ்யப் படையினர் கொன்று குவித்துள்ளனர். ரஷ்யாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம். கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. பள்ளிகள் குப்பைக் கிடங்குகளாக மாறிக் கிடக்கின்றன. தேவாலயங்களை ரஷ்யப் படையினர் கழிப்பறைகளாக பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
:
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement