கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று கேரளா மாநிலம், கொல்லத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் பணம் வசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கொல்லம், குந்நிக்கோடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவரும் அனஸ் என்பவரிடம் பாரத் ஜோடோ யாத்ரா-வுக்காக நன்கொடை கேட்டு 2,000 ரூபாய்க்கான ரசீதை காங்கிரஸ் கட்சியினர் கொடுத்திருக்கின்றனர். ஆனால், அனஸ் 500 ரூபாய் கொடுத்துவிட்டு, இவ்வளவுதான் தன்னால் தர இயலும் எனக் கூறியிருக்கிறார். அதையடுத்து, 2,000 ரூபாய் வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் அடம்பிடித்திருக்கின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், கோபமான காங்கிரஸ் நிர்வாகிகள் அனஸின் கடையில் உள்ள பொருள்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்து அனஸ் குந்நிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்த ரசீதையும் அனஸ் வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் பணம் கேட்டு கடையில் தகராறில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இது பற்றி கொல்லம் விளாக்குடி வெஸ்ட் மண்டல காங்கிரஸ் தலைவர் சலீம் சைனுதீன், “நாங்கள் பணம் கேட்டு தகராறு செய்யவில்லை. நடைப்பயணத்தை விமர்சிப்பதற்காக சி.பி.எம் கட்சியினர் பிரச்னை செய்கின்றனர்” என்று விளக்கமளித்தார்
இந்த நிலையில் காய்கறி கடையில் பணம் கேட்டு தகராறு செய்த கொல்லம் விளக்குடி வெஸ்ட் மண்டலத் தலைவர் சலீம் சைனுதீன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குந்நிக்கோடு ஷாஜகான், இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஹைச் அனீஷ்கான் ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை கேரள மாநிலத் தலைவர் கே.சுதாகரன் வெளியிட்டிருக்கிறார். ராகுல் நடைப்பயணத்துக்கு பணம் வசூலித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் செயல் வியாபாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.